பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த வீட்டு உதவியாளர் ஒருவர் தனது சவூதி முதலாளியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கத்தியால் குத்தினார் என்று சவூதி ஆன்லைன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தினரால் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு இந்த பெண் வீட்டு வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளார். சம்பவத்தன்று சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் காஃப்ஜியின் பகுதியில் உள்ள தனது முதலாளியின் வீட்டில் அவருடைய இரண்டு குழந்தைகளையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின்னர், கொடூர தாக்குதல் நடத்திய அந்த வேலைக்கார பெண், மின்சாரம் மற்றும் கத்தியை பயன்படுத்தி தன்னை தானே தாக்கிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இரண்டு குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதில் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரால் இந்த பெண் பணியமர்த்தப்பட்டபோது அவளுக்கு எந்தவிதமான உளவியல் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், அக்குடும்பத்தினர் அவளை நன்றாக கவனித்து வந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. தாக்குதல் நடத்திய பெண்ணின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
2019 புள்ளிவிவரங்கள் படி சவூதி அரேபியாவில் சுமார் 3.1 மில்லியன் வீட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.