நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவுள்ளது.
பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
மக்கள் இது குறித்த யோசனைகள், கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி, கொழும்பு – 1 எனும் முகவரிக்கும் அனுப்ப முடியும்.
அத்துடன் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான மின்னஞ்சல் முகவரியொன்றையும் தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மத்திய வங்கியில் நாளை (22) நடைபெறவுள்ள தமது குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் W.D. லக்ஸ்மனினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி ஹரிகுப்த ரோஹணதீர செயற்படவுள்ளார்.
மத்திய வங்கியில் பதிவுசெய்துள்ள நிதி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களின் போது சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகள் மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை செய்யவுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(Thanks - battinews)