ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் மரபிடங்களை முகாமைத்துவம் செய்ய ஒரு செயலணியை உருவாக்கியுள்ளார். தொல்லியல் மரபிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்காது. இந்த விடயத்துக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த செயலணி எவ்வாறு செயற்படப் போகிறது என்பதில் தான் சிறுபான்மை சமூகம் அச்சம் கொண்டுள்ளது. இவர்களது அச்சத்தில் நியாயம் இல்லாமலுமில்லை.
இந்த செயலணி கிழக்கு மாகாணத்துக்கென விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் தொல்லியல் மரபிடங்கள் இல்லையா அல்லது பாதுகாக்கப்படத் தேவையில்லையா..? இச் செயலணியானது கிழக்கு மாகாணத்திற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் பல்வேறு சிந்தனைகள் உருவெடுக்கின்றன. ஒரு கோணத்தில் கிழக்கு மக்கள் தொல்லியல் மரபிடங்களுக்கு சவாலாக உள்ளனர் என்ற பொருளையும் எடுக்கலாம். கிழக்கு மாகாண மக்கள் என்றால் முஸ்லிம்கள் என்ற பார்வை எழும். இது பேரின மக்களிடத்தில் இன்னும் முஸ்லிம்கள் மீதான குரோத சிந்தனையை வளர்க்கும் விதத்தில் அமையப் போகிறது. இவ்வாறான சிந்தனைக்கு நாட்டின் ஜனாதிபதியே இடம் வழங்கியிருக்கக் கூடாது. பொதுவாக இலங்கை நாட்டிலுள்ள அனைத்து தொல்லியல் மரபிடங்களையும் முகாமைத்துவம் செய்வதற்கென ஒரு செயலணியை அமைத்திருந்தால், இந்த சிந்தனை மக்களிடையே எழாது தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
இந்த செயலணியை அமைத்ததன் நோக்கங்களில் ஒன்றாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்தல் என்பதையும் ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான இலங்கையின் தொல் பொருளிடங்கள் இன்னும் கண்டறிந்து முடியவில்லையா? இதனை ஜனாதிபதி கோத்தாபாய தான் செய்யப் போகிறாரா? இவ்வாறு சிந்தனையை அமைக்கும் போது, இது சிறுபான்மையினரின் எல்லைக்குள் கால் வைக்கும் திட்டமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. கடந்த காலங்களில் தயா கமகே போன்ற இனவாதிகள் பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை தீக்கவாபி புனித பூமிக்கு சொந்தமான 12000 ஏக்கர் காணிகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த செயலணியினூடாக இப்படி ஏதேனும் பதிவுகள் வெளிப்படுத்தப்பட்டால் இலங்கை முஸ்லிம்கள் மிகக் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும்.
இக் குறித்த செயலணியில் இரு பௌத்த மத குருக்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனை தவறென யாரும் குறிப்பிட இயலாது. இச் செயலணியில் அத தெரண உரிமையாளரும் உள்வாங்கப்பட்டுள்ளார். இச் செயலணியில் அத தெரண உரிமையாளரின் வகிபாகம் எதுவாக இருக்கப் போகிறது. ஊடக ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் அத தெரணவின் உரிமையாளரும் உள்வாங்கப்பட்டுள்ளமையானது, இச் செயலணியினூடாக ஏதேனும் இனவாத திட்டங்கள் அரங்கேரப் போகிறதா எனும் சந்தேகத்தை வலுவாக்குகின்றது.
கிழக்கு மாகாணம் சிறுபான்மையினரை பெரும்பான்மையாக கொண்ட மாகாணம். இதில் சிறுபான்மையினரும் உள்வாங்கப்பட்டிருந்தால் சிறுபான்மையினரிடையே வீண் அச்சங்கள் தோன்றிருக்காது. ஏன் ஒரு சிறுபான்மையினராவது இச் செயலணிக்குள் உள் வாங்கப்படவில்லை. இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகர் சுனந்த தேசப்பிரிய, இது ஜனநாயகத்துக்கு முரணானது எனவும் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இது பெரும்பான்மை மக்களை திருப்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு செயலணியாகும். இதில் முஸ்லிம்களையும் இணைத்தால் அது வடிவமைக்கப்பட்ட நோக்கம் பிழைத்துவிடும். எதிர்வரும் தேர்தலில் இவைகள் தான் பேரின மக்களிடத்தில் பிரதான பேசு பொருளாக அமையப் போகிறது. இது தவிர்ந்து வேறேதுள்ளது? இந்த செயற்பாடானது, ஒரு அராஜக ஆட்சியின் பண்பை வெளிப்படுத்துகிறது. சிறுபான்மை மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத செயற்பாடுகள். இது தொடர்ந்தால் சிறுபான்மையினரின் இருப்புக்கள் கேள்விக்குறியாக்கப்படும். சிந்திப்போம்.. செயல்படுவோம்..
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.