இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல் மொழிப் பாண்டித்துவம் பெற்றிருந்தல் மிக இன்றியமையாத தேவையாகும், அதிலும் இலங்கைப் பாராளுமன்றத்தைப் பொறுத்த வரையில் தொடர்பூட்டும் மொழி (Linking-Language) என்றழைக்கப்படும் ஆங்கில மொழிப் பாண்டித்துவம் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிக அவசியமானதாகும்.
ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி வாசிப்பவர்களும், கையில் துண்டுகளை வைத்துக்கொண்டு அதனை பார்த்து வாசிப்பவர்களும், ஆங்கிலத்தில் கொன்னையாகப் பேசுபவர்களும், கூகுல் ட்ரான்ஸ்லேட் பாவிக்கும் வேட்பாளர்களும் எதிர்வரும் பாரளுமன்ற ஆசனத்தில் அமர்வது ஒரு சமுகத் துரோகமாக மாறிவிடும். இது அவர்களுக்குரிய தருணமல்ல.
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான இன மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தடையின்றி பேசக்கூடிய ஒரே இடம் பாராளுமன்றம்தான், நமது பேச்சுக்கள் ஆங்கிலத்தில் அமையும் போதுதான் நாம் நம்மீதான அடக்குமுறைகளை சர்வதேச மையப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சுமந்திரன் அவர்களின் இச்செயலுக்கு பின்னால் ஒழிந்திருக்கும் பெரும் சேவையும் தாற்பரியமும்தான் என்னவென்றால், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களை இலகுவாக சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டுள்ளமையேயாகும்.
சுருங்கக் கூறின், கனரக பீரங்கி போல் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்க வேண்டும். முன்னேவுள்ள இனவாதிகளுக்கு வாய் திறக்க வேண்டுமென்ற எண்ணமே மனதில் உதிக்கக்கூடாது. மட்டுமன்றி இனிமேல் ஐக்கிய நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியெனுக்கும் நமது பிரதிநிதிகளின் சப்-டைட்லுடன் (subtitled in English) கூடிய வீடியோக்களை அனுப்புவதற்குரிய எந்தவொரு தேவையும் இருக்கக் கூடாது. நமது பிரதிநிதிகள் எதைக் கூறுகிறார்கள் என்பதை வெளிநாடுகள் நேரடியாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
சகோதரர்களே, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், சிறுபாண்மையாகிய நாங்கள், வாக்களிக்க இருக்கும் ஒவ்வொரு வேட்பாளரும் ஆங்கில மொழித் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்று சிந்தித்துப்பார்க்க வேண்டிய கட்டாய கடமை இன்று எம்மீது திணிக்கப்பட்டுள்ளது (பர்ளு ஐன்) என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதிலும் கல்வி கற்றவர்கள் இந்த விடயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், இவ்விடயம் சம்பந்தமாக மற்றயவர்களையும் அறிவூட்ட வேண்டும்.