ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் ‘செயலணி’ என்ற பெயரில் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் வழமையான கொள்கைகளையும் கடந்து, அதிகாரம் மிக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட செயலணிகள் ஊடாக தன்னாட்சி அதிகாரம் உடையவர் போன்று இலங்கையின் ஜனாதிபதி நாட்டை எவ்வாறு ஆட்சி செய்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விளக்கப்படமொன்றை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “இந்த அமைப்புக்கள் சரியான முறையில் மக்களால் தெரிவு செய்யப்படாதவை என்பதுடன், இவை சிவில் சேவையின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படும் ஜனாதிபதியின் நேரடியான பொறுப்பில் இருப்பதுடன், அவை நாடாளுமன்றத்தின் வழமையான ஆய்விற்கும் மேற்பார்வைக்கும் உட்படுவதில்லை.
அரசியல் யாப்பில் திருத்தம் செய்யக்கூடியதாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி பெற்றுக்கொள்வார் என்று நம்பப்படும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் காரணமாக இது மேலும் கவலையடையச் செய்கிறது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலணிகள் ஒரு சமாந்தரமான அரசை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதுடன் பெரும்பாலும் ஜனாதிபதி, அவரது குடும்பம் மற்றும் முன்னாள் இராணுவச் சகபாடிகளுக்கு ஆதரவு வலையமைப்புக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான இணையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்று யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
நன்றி - உதயன் செய்திகள்.