Ads Area

எனதருமை இளைஞர்களுடன் ஒரு சில நிமிடங்கள்!

Dr. Nagoor Ariff

நானும் உங்களின் வயதைக் கடந்து வந்தவன்தான். இந்த வயதில் நாடி நரம்புகளின் வீரியம் என்னவென்பதனை அறிந்தவன்தான். உணர்வுகளும் உணர்ச்சிகளும் எவ்வாறு கரைபுரண்டு ஓடும் என்பதனைத் தெரிந்தவன் தான். சிந்தனைகளும் எண்ணங்களும் எவ்வாறு அலைபாயும் என்பதனைப் புரிந்தவன் தான்.

அந்த அனுபவத்தையும் கொண்டு உங்களுடன் ஒரு சில நிமிடங்கள் உரையாட நினைக்கிறேன்.

நீங்கள் நாளைய தலைவர்கள் என்பது வழமையான பல்லவி தான். ஆனால் அதனை விட, நீங்கள் தான் உங்களின் குடும்பத்தின் நாளைய அச்சாணி என்பது மிகவும் முக்கியமான உண்மையாகும். இதனைப் புரிந்து ஏற்றுக்கொண்டால் மாத்திரமே தொடர்ந்தும் என்னோடு இங்கு பயணியுங்கள். இல்லையேல், இந்த சில நிமிடங்களை நீங்கள் விரையமாக்கியதாகவே முடியும்.

இன்று நாம் வீதிகளில் பொதுவாக காணக்கூடிய ஒரு விடயம் தான், இளைஞர்களும் மோட்டார் சைக்கிள் சவாரியும். ஒரு மோட்டார் சைக்கிளில் இருவராகவும், மூவராகவும் தலைக்கவசம் கூட அணியாமல் பவனி வருவதாகும்.

பிரதான வீதிகளில் மாத்திரமல்லாது சின்னஞ்சிறிய ஒழுங்கைகளிலும் மின்னல் வேகத்தில் சவாரிசெய்கின்றீர்கள். சிலர் சொந்தமாகவும், பலர் வாடகைக்கு எடுத்தும் தான் ஓடுகிறீர்கள். அப்படியான பலரின் அநேகமான பெற்றோர்கள் வசதி குறைந்தவர்களாகவும், வருமானம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். உங்களின் நச்சரிச்சல் தாங்க முடியாமல், நகைகளை அடகு வைத்தோ அல்லது யாரிடமாவது இரவல் வாங்கியோ உங்களுக்கு பணம் தருகிறார்கள். சுயமான தொழில் இல்லாமல் நடமாடித்திரியும் உங்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளையே செய்துகொடுக்க அவஸ்தைப்படும் உங்களின் பெற்றோரின் கஷ்டங்களில் பங்கெடுக்கவேண்டிய நீங்கள், அவர்களை இன்னும் அவஸ்தைக்குள்ளாக்குகிறீர்கள்.

இத்தனைக்கும், லாவகமாக இருவர் மூவராக மோட்டார் சைக்கிளில் வேகவேகமாக சவாரிசெய்து நீங்கள் அடைந்துகொள்ளும் பிரயோசனம் எதுவுமே இல்லை.

மாறாக, மின்னல் வேகத்தில் சவாரி செய்வதன் மூலமாக விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்கும் உங்களின் பெற்றோர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் விபத்துக்குள்ளாகினால் அவர்கள் எதிர்நோக்கப்போகும் கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் அந்தக் குடும்பத்தின் அச்சாணியாக இருக்கவேண்டிய நீங்கள் விபத்துக்குள்ளாகி உயிர் பிரிந்தாலோ அல்லது பல காலம் படுத்த படுக்கையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலோ, குடும்பத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

தினமும் நாம் கேள்விப்படுகின்ற, காணுகின்ற விபத்துகள் என்னை உங்களோடு ஒரு சில நிமிடங்கள் பேசச்சொல்கிறது. இளம் ரத்தம் துடிப்பானது தான். ஆனால் சிந்திக்கக்கூடியது. சிந்தியுங்கள்! உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்! உங்களின் பெற்றோருக்காக, உங்களின் சகோதர சகோதரிகளுக்காக, உங்களின் குடும்பத்தின் அச்சாணியாக வாழ்ந்துகாட்டுங்கள்!

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று கடந்தும் போகலாம். ஆனால், விதியையும் மதியால் வெல்லலாம் என்பதற்காகவே அள்ளாஹ், எமக்கு ஆறாவது பகுத்தறிவைத் தந்துள்ளான் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

நிந்தவூர் பிரதான வீதியில் இன்று இடம் பெற்ற விபத்தில் சம்மாந்துறை இளைஞர் ஒருவர் மரணம் விபரம் - http://www.sammanthurai24.com/2020/08/Nintavur-accident-sammanthurai-Nazik.html


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe