Ads Area

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.

(காரைதீவு   சகா)

கொரோனாவுக்கு பிந்திய  இன்றைய அசாதாரண சூழ்நிலையில் இழந்த கல்வியை மீட்பதற்காக உரிமைகள் சலுகைகளைத் தூக்கி யெறிந்துவிட்டு மனிதாபிமானரீதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முன்வாருங்கள். இவ்வாறான பகிரங்க வேண்டுகோளை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் நேற்று சம்மாந்துறையில் வைத்து விடுத்தார்.

கிழக்குமாகாண ஆசிரியர்களே.. உங்களுக்கு அன்பான அழைப்பை பகிரங்கமாக விடுக்கின்றேன்.. என்று கூறிவிட்டு மேற்சொன்ன வேண்டுகோளை விடுத்தார்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் சம்மாந்துறை வலயத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்  (10) வியாழக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழாம் நேற்று வலயத்திற்கு விஜயம் செய்தது. மாகாண கல்வித்திணைக்கள தலைமைக்கணக்காளர் எம்.எ.எம்.றபீக்கும் வருகைதந்திருந்தார்.

முதலில் கல்விசார அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் கல்வி நிருவாகம் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அடுத்து கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் கல்விசார் உத்தியோகத்தர்களுடன் நட்புரீதியாக சுமுகமாக நடைபெற்றது. பின்பு வலய அதிபர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது. சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் குறித்த கூட்டங்கள் இடம்பெற்றன.

அங்கு பணிப்பாளர் நிசாம் மேலும் பேசுகையில்:

நாம் ஏலவே கிண்ணியா கல்குடா ஆகிய வலயங்களுக்கு இத்தகைய கல்விசார் விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். 3வது வலயமாக இங்கு வந்துள்ளோம். நிருவாகம் கல்விஅபிவிருத்தி சார்ந்து அவற்றிலுள்ள குறைநிறைகளை நட்புரீதியாக தீர்த்து வகுப்பறை மாணவரின்கல்வியை சீராக்குவதே எமது நோக்கம்.

இன்றையகாலகட்டத்தில் கல்விஅபிவிருத்தி என்பது சவாலாக மாறிவிட்டது.
கொரோனா அச்சுத்தலால் இழந்த கல்வியை மீட்டெடுப்பதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளது. அதனிடையே 3 பொதுப்பரீட்சைகளும் வருகின்றன.

தரம்5புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் இன்னும் ஒருமாதத்தில் வருவதால் அவர்களது சுயகற்றலுக்கு வழிவிட்டு போதுமான ஆலேசனைகளையும் வழிகாட்டல்களையும் செய்யவேண்டும்.

ஆனால் இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சை என்பது சவால் மிக்கதொன்றாகிறது. இன்னும் நான்கு மாதங்களில் தனிப்பட்டகற்றலுக்கு ஒருமாதம் போனால் ஆக 3 மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்குள் பாடத்திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்வதைவிட றுகியவழியை பலயுக்திகளைப்பயன்படுத்தி பரீட்சைக்கு அவனை தயார்படுத்தவேண்டும்.

பரீட்சையை அவன் வெற்றிகரமாக நம்பிக்கையுடன் முகங்கொள்ள அவனை தயார்படுத்தவேண்டும். பரீட்சையில் வெற்றிபெற சிறந்தபெறுபேற்றைப்பெற அவனை நம்பிக்கையூட்டவேண்டும்.

எனவே இன்றைய அசாதாரணசூழ்நிலையில் விடுபட்ட பாடப்பரப்பை ஆசிரியர் பூர்த்தி செய்வதைவிட நேரடியாக பரீட்சைக்குத்தயார்படுத்தும் யுக்திகளை கையாளவேண்டும்.

வெகுவிரைவில் கிழக்கிலுள்ள பாடரீதியான உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களை அழைத்துக் கலந்துரையாடி இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறவுள்ளோம். பெறுமதியான கருத்துக்க் வரவேற்கப்படும்.

நாம் இங்கு குறைகள் பிடிக்கவோ பழிவாங்கவோ வரவில்லை. மாறாக கிழக்கின் கல்வித்தரத்தை உயர்த்தவும் சா.தரப்பரீட்சைக்கு தயார்படுத்தும் யுக்திகளை தேடவும் புறப்பட்டுள்ளோம். எதிர்வரும் இருவாரகாலப்பகுதியில் குறித்த ஆலோசனைகளைப்பெற்று திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது.

இங்குள்ள சிறந்த செயற்பாடுகளை ஏனைய வலயங்களுக்கு அறிமுகம் செய்யவும் தயாராகவுள்ளோம். நாம் கடந்த இருவாரகாலமாக இரவு 12 மணிவரை செயற்படுகிறோம். எமது குழாத்தினரும் பூரணமாக ஒத்துழைக்கிறார்கள். எனவே மாணவர் ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்புடைய நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வருமாறு அன்பாக அழைக்கிறேன்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe