நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபையினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் தினமும் கொட்டப்படும் திண்மக்கழிவுகளினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட தொடர்மாடி குடியிருப்பில் வாழும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனும் செய்தியை கடந்த தினங்களில் பிரசுரித்திருந்தோம்.
அங்கு கொட்டப்படும் குப்பைகளால் காற்றோடு தூர்நாற்றம் அதிகமாக வீசுவதாகவும் ஒவ்வொரு நாளும் துர்நாற்றம் கூடிக்கொண்டிருக்கின்றது என்றும் அந்த தூர்நாற்றத்தை சிறுவர்கள், வயோதிபர்கள் தினசரி சுவாசிக்க வேண்டியவர்களாக மாறி இருக்கிறார்கள். இவ்வாறான விளைவுகளால் அங்கு வாழ்கின்ற சிறியவர்கள், வயோதிபர்கள் மட்டுமின்றி அண்மையில் உள்ள வைத்தியசாலை மற்றும் குடியிருப்புக்களில் உள்ள நோயாளிகள் கூட அத்தூர்நாற்றத்தையே சுவாசிக்கின்றார்கள். அது மட்டுமின்றி பல இன்னல்களை எதிர் நோக்குகின்றார்கள் எனவே கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர், சுகாதார பிரிவினர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இதனை கவனத்தில் கொண்டு இதற்குரிய தீர்வை உடனடியாக செய்து தரவேண்டும் என்று மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களின் பணிப்புரைக்கு அமைய அவ்விடத்தில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியை கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் அடங்கிய குழுவினர் (11) மாலை முன்னெடுத்தனர்.
இந்த குப்பைகளினால் யானைகளின் அட்டகாசம் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்த நிலையில் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் எங்களின் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போது கூடிய விரைவில் அந்த பிரச்சினையை தீர்த்து தருவதாக நேற்றுமுன்தினம் உறுதியளித்திருந்தார். பின்னர் டாக்டர் அர்ஷாத் காரியப்பர் அடங்கிய குழுவினர் அந்த கழிவுகளை நேற்று மாலை அகற்றி சுத்தமான பிரதேசமாக அப்பிரதேசத்தை மாற்றியமைத்துள்ளனர். இந்த செயலுக்கு கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர், சுகாதார ஊழியர்கள் இந்த செய்தியை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்ற ஊடகங்கள் எல்லோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.