தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தற்காலிகமாக தடையிலிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவைகள் இன்றிலிருந்து அதாவது செப்டம்பர் 15ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 15ம் திகதியிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், தற்பொழுது அத்தடையை பகுதியளவு தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் சவுதி அரேபியாவில் அடுத்த வருடம் அதாவது எதிர் வரும் ஜனவரி 1ம் திகதி 2021 ஆண்டுக்குப் பிறகு தரை, கடல், மற்றும் ஆகாய மார்க்கமான அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதற்கான அறிவித்தல் 2021 ஜனவரி 1ம் திகதிக்கு 30 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் டொக்டர் தௌபீக் அல்-ராபிஹ் அவர்களிடம் சவுதியில் சர்வதேச விமானப் போக்குவரத் சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கேட்கப்பட்ட போது “கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவல் குறைந்து செல்லும் நிலையின் அடிப்படையில் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவையினை மீள ஆரம்பிக்க முடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.
நிற்க,
சவுதி அரேபியாவிற்கான சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீக்கம் குறித்து தற்போது பலர் சரியான தெளிவு இல்லாது சமூகவலைத்தளங்களில் விளக்கங்கள் கொடுத்து வருவதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களின் கூற்றுப் படி சவுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவை எதிர்வரும் ஜனவரி 1ம் திகதிதான் திறக்கப்படுகின்றது என செய்திகளை பகிர்ந்து வருகின்றனர் ஆனால் உண்மையதுவல்ல. சவுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவை இன்றிலிருந்து (2020-09-15) பகுதியளவில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி 2021 ஆண்டு முழுமையாக தடை நீக்கப்பட்டு வழமை போன்று இயங்கும் என்பதுதான் உண்மையான தகவலாகும்.