தேனி மாவட்டம் சின்னமனூர் கே.கே.குளம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கோபிநாத். டிப்ளமோ படித்த இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் ஜெயப்பிரியாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு கோபிநாத் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தம் காரணமாக சென்று விட்டார். திருமணம் செயத ஜெயப்பிரியாவோ, கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கோபிநாத், தனது மனைவியை அழைப்பதற்காக சுருளிப்பட்டிக்கு சென்றுள்ளார். ஆனால் அவருடன் வருவதற்கு ஜெயப்பிரியா மறுத்து விட்டதாக தெரிகிறது. மனைவி ஜெயப்பிரியா, அவருடைய தந்தை பிரேம்குமார், தாயார் விமலா, அண்ணன் நிஜந்தன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை திட்டியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். வெளிநாட்டுக்கு பணம் சம்பாதிக்க சென்றது குற்றமா என உறவினர்களிடம் நொந்து போய் பேசியுளளார். மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனம் உடைந்த கோபிநாத் தனது வீட்டின் அறையில் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட அறையில் காவல்துறையினர் சோதனை செய்ததில் கோபிநாத் தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்த எழுத்துக்கள் மனைவி மீதான காதலையும, அன்பையும் வெளிப்படுத்தியோடு தன்னுடைய சாவுக்கு யார் காரணம் என்றும் எழுதியுள்ளார். அதோடு தனக்கு வாழ விருப்பம் இல்லாததால் உயிரை மாய்த்து கொள்கிறேன் என எழுதியதோடு, தன் சாவுக்கு 7 பேர் காரணம். உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, கோபிநாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.