கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சவூதி அரேபியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மக்காவில் உள்ள புனித மசூதியில் வழிபாட்டாளர்கள் தொழுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்பொழுது மக்காவில் உள்ள புனித மசூதியில் வழிபாட்டாளர்களுக்கு கொரோனாவினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அதே போன்று, கடந்த மார்ச் மாதத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த உம்ராவிற்கும் தற்பொழுது பகுதியளவு தடை நீக்கப்பட்டு இந்த மாதத்தில் இருந்து குறிப்பிட்ட அளவில் வழிபாட்டாளர்கள் உம்ரா செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புனித மசூதியில் சவூதி நாட்டவர்களும் சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களும் தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புனித மசூதியில் இன்று காலை (ஃபஜ்ர்) தொழுகை முதல் வழிபாட்டாளர்கள் தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வந்த படிப்படியான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு சுமார் 40,000 வழிபாட்டாளர்கள் மற்றும் 15,000 உம்ரா யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் உம்ரா செய்ய வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் - https://www.arabnews.com/node/1750526/saudi-arabia
தமிழில் -khaleejtamil.com