Ads Area

குவைத்தில் இலங்கை பணிப் பெண்கள் பலருக்கு கொரோனா தொற்று!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இலங்கை பணிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் குழு மற்றும் குறித்த வீட்டில் நீண்ட காலமாக பணியாற்றும் பணிப்பெண்கள் 160 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்;டு இதனை தெரிவித்துள்ளது.

ஆகவே தற்போதைய சூழலில் அங்குள்ள பாதுகாப்பு வீட்டில் தங்குமிட வசதி போதாமையால் இனிமேல் வீட்டுப் பணிப்பெண்ணைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே குவைத்தில் உள்ள தமது நிறுவனத்திற்கு கடமைகளுக்காக வருவதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான குவைத் தூதரகம் அங்குள்ள பணிப்பெண்களை கேட்டுள்ளது.

ஆனால் தூதரகத்தை அழைத்தோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டோ தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என குவைத் தூதரகம் கேட்டுள்ளது. எனினும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நாளை(18) முதல் அவசர சேவைகளுக்காக மாத்திரம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் தங்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் பின்வருமாறு அறிவித்துள்ளது.


விஷேட அறிவித்தல்

நாம் ஏலவே அறியத்தந்தது போன்று குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு அனுப்ப முடியாமல் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ள காப்பகத்தில் நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டுள்ள 160 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்குறித்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் இடப்பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டும் இனி வரும் நாட்களில் எந்தவொரு புலம் பெயர் பெண் தொழிலாளரும் தூதரக காப்பகத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதே நேரம் இலங்கை அரசின் தீர்மானத்தின் பிரகாரம் குவைத் இலங்கை தூதரகத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் நலன்புரி பிரிவின் பெரும்பாலான அதிகாரிகளின் சேவைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

எனவே மேற்சொல்லப்பட்ட காரணங்களினால் பணி புரியும் இடங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து தனது அனுசரணையாளருக்கு (கபீல்) தெரியாது வீடுகளை விட்டு வெளியேறி தூதரகத்துக்கு வருவதனைத் தவிர்க்குமாறும் 25354633 எனும் தொலைபேசி இலக்கம் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை அறியத் தரலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக முறைப்பாட்டை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் உங்களது அனுசரணையாளரிடம் (கபீலிடம்) தொடர்ந்தும் உங்களுக்கு பணி புரிய விருப்பம் இல்லாத போது , அதனை அனுசரணையாளருக்கு (கபீலுக்கு) தெரியப்படுத்தி , ருமைதியாவில் அமைந்துள்ள மனித வள அதிகார சபையின் கீழ் இயங்கும் “அமாலா மன்ஸில்” ஊடாக குவைத் அரசினால் பராமரிக்கப்படும் தொழிலாளர் காப்பகத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேற்குறிப்பிடப்பட்ட முறைகளைப் பின்பற்றாது பணி புரியும் இடங்களிலிருந்து வெளியேறுபவர்கள் தமது இருப்பிடத்தை இழப்பதோடு மீண்டும் தமது அனுசரனையாளரிடமோ (கபீலிடமோ) அல்லது வேலைவாய்ப்பு முகவரிடமோ (ஏஜன்சி) திரும்பிச் செல்ல நேரிடும் அல்லது தனக்கான தங்குமிடத்தைத் தானே தேடிக் கொள்ள நேரிடும் என்பதனை அறியத்தருகிறோம்.

இலங்கை தூதரகம் – குவைத்

16 ஒக்டோபர் 2020



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe