Ads Area

மனிதநேய மருத்துவ சேவை மூலம் தமிழ்,முஸ்லிம் மக்களின் மனங்களை வென்றார் டாக்டர் கிருஷ்ணகுமார்!

 நூருல் ஹுதா உமர்

தமிழ் முஸ்லிம் நல்லுறவை வெகுவாக கடைப்பிடித்து கண்ணியமும் கௌரவமாகவும் மேலோங்க மருத்துவம் செய்த களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிருஷ்ணகுமார் அவர்கள் தனது முஸ்லிம் நண்பர்கள் அவர்களின் உறவினர்களிடம் கூட சிறந்த உறவையும், கௌரவத்தையும் பேணிவந்ததுடன் பிராந்தியத்தின் நன்மதிப்பை பெற்ற ஒரு சமூக நல ஆர்வலராகவும், வைத்தியராகவும் இருந்துள்ளார் என மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த எல்லோராலும் சிறந்த மனிதராக பேசப்பட்டு கல்முனை பிராந்திய தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் இடம் பிடித்த டாக்டர் கிருஷ்ணகுமார் அவர்கள் இன்று (01) அதிகாலை 3. 00 மணியளவில் திடீர் சுகவீனமுற்று காலமானார். அன்னாரின் மறைவையொற்றி வெளியிடப்பட்டுள்ள அனுதாப செய்தியிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அனுதாப செய்தியில்,

நாட்டில் இனவாதமும், பிரதேசவாதமும் உச்சகட்டமாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம் உறவை வைத்தியத்துறையை கொண்டு உருவாக்கிய மகானாகவே வைத்தியர் கிருஷ்ணகுமார் அவர்களை காண்கிறோம். மருதமுனை, கல்முனை முஸ்லிம் மக்களுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருந்த இவர் எங்களின் பிரதேச மக்களுடன் கௌரவமாக பழகும் தன்மை கொண்டவர். தனது தனியார் கிளினிக் நிலையத்தில் மருத்துவ தேவைக்காக வரும் வசதியற்ற மக்களிடமும் நிலையறிந்து பணம் வாங்காமல் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கியவர் என்பதை நினைக்கும் போது அவரது சேவை மனப்பான்மை மக்கள் மனங்களில் எப்போதும் கௌரவம் பெறுகிறது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும் மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் சார்பில் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe