மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் புலம்பெயர் இளவயது தொழிலாளர்களின் (மர்ம) மரணங்கள்.
“மாலை நேரம் எங்களுடன் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்; இரவுச்சாப்பாடு ஒன்றாகவே சாப்பிட்டோம்; ஒன்றாகவே தூங்கினோம்; ஆனால் காலையில் அவர் ஏழும்பவில்லை; மரணித்து விட்டார்!” “Sudden Unexplained Nocturnal Death Syndrome.”
மத்திய கிழக்கு (சவுதி அரேபியா, கட்டார்) நாடுகளில் இளவயது ஆண்கள் மாரடைப்பினால் மரணித்த தகவல் அடிக்கடி செய்திகளாக வருகின்றன.
இதன் மர்ம பின்னணியை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.
ஆய்வுக்கட்டுரை By:- Dr. A.I.AZiyad, MBBS, MD - Health Informatics.
2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 1.1 million பேர் பணிபுரிகின்றனர். (ஆதாரம் 1)
வருடம் ஒன்றுக்கு இலங்கையைச் சேர்ந்த 600 வேலையாட்கள் (Migrant workers) மத்திய கிழக்கு நாடுகளில் மரணிக்கின்றனர். (ஆதாரம் 2). அதாவ்து சராசரியாக நாளொன்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள்.
இம் மரணங்களுக்கு பிரதான காரணம் மாரடைப்பு (Heart Attack). இதற்கு அடுத்த நிலையில்தான் விபத்துகள் அது தொழில் ரீதியான தாகவும், வீதி விபத்துகளாகவும் அமைகின்றன. (ஆதாரம் 3)
இது சம்பந்தமாக நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்றின்போது 2002ல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 86 உடல்களை பரிசோதித்தபோது:-
அதில் 42 விபத்துகள் ஆகவும் ஏனைய 44 Heart attack என்றும் File மூடப்பட்டது. அந்த 44 இல் 31 மருத்துவ காரணங்கள் ஆகும். 10 இயற்கை மரணமாகவும் 3 மருத்துவ சான்றிதழ் இன்றியும் பெறப்பட்டது. (ஆதாரம் 4)
அதேநேரம் Arabnews இணையத்தில் வெளியான 2012 ஆம் ஆண்டுக்குரிய தகவலின்படி தினந்தோறும் ஒரு இலங்கையர் மரணிப்பதும் அதில் 75% பெண்களாகவும் அவர்கள் 30 வயதிலும் குறைந்தவர்களாகவும் காணப்பட்டனர். பெரும்பாலானோரின் மரணத்திற்கு காரணமாக Heart attack குறிப்பிடப்பட்டிருந்தது. (ஆதாரம் 5)
இருக்க, இலங்கையில் பெண்களுக்கான சராசரி ஆயுள் காலம் 79 வருடங்கள் ஆகும்.
இது பெண்களின் நிலை. பெண்கள் பொதுவாக House maid என்ற ரீதியில் தனியாகவே வீடுகளில் வசித்து வருவதால் அவர்களின் மரண வரலாறு புரியாத புதிராகவே உள்ளது.
ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் விடுதிகளில் மேலும் சிலருடன் தங்குவதால் அவருடைய மரணம் பற்றிய ஓரளவு தகவல்களை பெறக்கூடியதாக உள்ளது.
சமீபகாலமாக இலங்கை ஆண்களின் இறப்பு வீதம் அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய ஆண்டுகளில் பெண்கள் செல்வதற்கு அதிக கட்டுப்பாடுகள், அதிகளவு ஆண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றமை , கட்டார் போன்ற நாடுகளுக்கு உலக கிண்ண மைதான கட்டுமான பணிகளுக்கு அதிக ஆண்கள் தேவைப்படுகின்றமை என்பவற்றை குறிப்பிடலாம். (ஆதாரம் 6)
ஆண் மரணங்களில் சிலர் நெஞ்சுவலி என்று சொல்லி வைத்தியசாலையில் அனுமதித்து மரணித்தாலும் பெரும்பாலான மரணங்கள் இரவில் சாதாரணமாக தூங்கச் சென்று காலையில் எழும்பாமல் மரணித்த நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இதனை “Sudden Unexplained Nocturnal Death Syndrome.” என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணம் மர்மமாக இருந்தாலும் இயற்கை மரணம், ஹார்ட் அட்டாக், cardiac arrest என்பவையே அதிகமான பிரேத பரிசோதனை அறிக்கைகள் கூறுகின்றன.
பொதுவாக இவற்றை தூக்க நிலையில் ஏற்படும் Heart attack என்று சொல்லலாம். பல மருத்துவ ஆய்வுகளின் படி வெளிநாடுகளில் கடமை புரியும் குறைந்த வாழ்க்கைத்தரம் கொண்ட ஆசியவைச் சேர்ந்த ஆண்களுக்கு இது ஏற்படுகிறது.
அல்ஜசீரா வால் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி மரணித்தவர்களின் நண்பர்களின் பொதுவான கூற்று
“மாலை நேரம் எங்களுடன் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்; இரவுச்சாப்பாடு ஒன்றாகவே சாப்பிட்டோம்; ஒன்றாகவே தூங்கினோம்; ஆனால் காலையில் அவர் ஏழும்பவில்லை; மரணித்து விட்டார்.” (ஆதாரம் 8)
பொதுவாக இம்மரணங்கள் அதிகமாக Unskilled laborers களுக்கு ஏற்படுகிறது. இதில் அதிகமாக மரணிப்பவர்கள் நேபாளிகள் (நேபாளம்). சமீபகாலமாக கட்டாரில் இடம்பெற்றுவரும் உலக கிண்ண உதைபந்தாட்ட மைதான தயாரிப்புகளில் ஈடுபடும் நேபாளிகள், இந்தியர்கள் பலர் உயிரிழந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இம்மரணங்களுக்கு நேரடியான மற்றும் மறைமுகமான பல காரணிகள் உள்ளது. (ஆதாரம் 7)
நோயாளிகளின் மரணங்கள் தொடர்பாக நேபாள அரசாங்கத்தின் அறிக்கைப்படி கட்டுமான பணிகளில் அதிக நேரம் வெயிலில் வேலை செய்தல், காற்றோட்டம் இல்லாத அறைகளில் நெரிசலுடன் வசித்தல், சுத்தமான நீர், ஒழுங்கான உணவு இன்மை, மன அழுத்தம் போன்றவை அமைகின்றன. (ஆதாரம் 8)
எந்த ஒரு ஆன்மாவும் தனக்கு குறிக்கப்பட்ட தேதியில் மரணித்தே ஆகவேண்டும். இருப்பினும் இதற்கு பல்வேறு மருத்துவ காரணிகள் அடிப்படையாக அமைகின்றன.
மருத்துவரீதியாக இவற்றை நோக்குவோம்.
01. அதிக வேலைச்சுமை:-
பொதுவாக கட்டுமான பணிகளுக்கு குறைந்த சம்பளத்தில் நேபாளிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் Khafala எனும் முறை மூலம் Sub Agents களால் வரவழைக்கப்படுகிறார்கள். எமது நாடு போன்றல்லாது நேபாளிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் போது பெரும் தொகை பணத்தை செலுத்திவிட்டு வரவேண்டும். இலங்கையர்கள் கூட ஒப்பந்த காலம் முடியாமல் நினைத்த மாதிரி நாட்டுக்குத் திரும்பி செல்ல முடியாது. இதனால் நாள் ஒன்றுக்கு பல மணி நேரங்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.
அதாவது நவீனகால அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். மருத்துவ ஆய்வுகளின் படி வாரம் ஒன்றுக்கு 55 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்தால் Atrial Fibrillation எனும் இருதய பாதிப்பு ஏற்படுகிறது அது பின்னாட்களில் மரணத்தை ஏற்படுத்தலாம். (ஆதாரம் 9)
02. உடற்பயிற்சி இன்மை:-
பொதுவாக House drivers, Waiters, Office workers தொடர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே உள்ளனர். வேலை நேரம் முடிவடைந்ததும் உடற்பயிற்சி செய்வதும் இல்லை. அதிகமாக சமூக வலைத்தளங்களில் காலம் கழிகிறது. இதனால் உடல் நிறை அதிகரித்தல் மற்றும் சீனி, பிரஷர் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன.
03. உணவு பழக்கவழக்கம்:-
சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல், உணவு உட்கொள்ளும்போதும் அதிக கலோரி கொண்ட Fast foods களை உட்கொள்வதால் உடலில் காபோவைதரேற்று அதிகரித்து அதன் மூலம் நீரிழிவு நோய், இதயத்துக்கான இரத்தக் குழாய்களில் atherosclerosis எனும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகிறது.
04. மன அழுத்தம்:-
இது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் மரணங்களுக்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்று. (ஆதாரம் 10) வீட்டில் இருப்போர் வெளிநாடு சென்றுவிட்டால் மாதம் மாதம் பணம் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பணத்துக்காக பிணமாக உழைப்பவர்கள் தங்கள் கவலைகளை வெளியே சொல்வதில்லை.
4A) இரவு பகல் தூக்கம் இன்றி வேலை. ( பொதுவாக ஹவுஸ் டிரைவர்களுக்கு)
4B) Home Sickness எனும் வீடு பற்றிய கவலை. இது பொதுவாக திருமணம் முடித்து குழந்தைகள் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. தன் மனைவியின் பிரசவத்துக்கு கூட நிற்க முடியாமை. குழந்தைகளின் பாசத்துக்கு தவிர்த்தல். குடும்பத்தில் நிகழும் நல்லது கெட்டது போன்றவற்றில் சமூகமளிக்க முடியாமை என பட்டியல் நீண்டு செல்லும்.
4C) சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழித்தல். வெளிநாடுகளில் இருந்து கொண்டு உள்நாட்டு அரசியல் செய்தல். கருத்து சொல்லுதல் என்ற பேரில் ஏனையவர்களுடன் வாக்குவாதப்பட்டுல். இதன்போது ஒருவருடன் நேரடியாக சண்டை பிடிக்கும் போது ஏற்படும் ஓமோன் மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதால் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. இது நாளடைவில் இதயத்தை பாதிக்கிறது.
4D) தற்காலத்தில் உலகளாவிய கொரோனா தொற்று. இதன் மூலம் வேலை இன்றி முடக்கப்படுதல், சம்பளம் குறைக்கப்படல் or வழங்கப்படாமை, Visa காலம் முடிந்ததும் நாட்டுக்கு திரும்பி வர முடியாமல் நிர்க்கதியாதல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
மன அழுத்தத்தை (Stress) குறைக்க சிறந்த முறை Social Media க்களுக்கு அடிமை ஆவதை குறைத்து தியானம் (Meditation) செய்தல். (ஆதாரம் 11) இஸ்லாமியர்களை பொறுத்தவரை By Default தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் என்பன சிறந்த Meditation ஆக அமைகின்றன.
05. மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படாமை:-
மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவச் செலவு மிக அதிகமாக இருப்பதால் காய்ச்சல், உடல் உபாதைகள் போன்ற நிலைமைகள் தவிர மருத்துவப் பரிசோதனைகள் செய்வதில்லை.
இன்னும் சிலருக்கு Free Medical இருந்தும் வேலை பளு, கவனயீனம் காரணமாக அவற்றை செய்வதில்லை.
06. தொற்றா நோய்களை கட்டுப்படுத்தாமை:-
சீனி, உயர் குருதி அழுத்தம் (Pressure) போன்ற நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை கட்டுப்படுத்த தவறிவிடுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் இயந்திர வாழ்க்கை, கவனயீனம், Social Media க்களில் வரும் வில்லேஜ் விஞ்ஞானிகளால் சொல்லப்படும் கருத்துகளால் திசைதிருப்படுதல். இதனால் தமது நோய் நிலைமையை அறிவதற்கும் அவற்றுக்கான மருந்துகளை செய்வதற்கும் தவறிவிடுகின்றனர். இதுவே சொந்த வீடாக இருந்தால் தான் கவனஈனமாக இருந்தாலும் தன்னைச் சுற்றியிருக்கும் உறவுகளின் நிர்பந்தத்தால் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுகின்றனர்.
உண்மையில் சீனி (சக்கரை) நோயானது Silent Heart Attack எனும் வலி இன்றிய இருதய செயலிழப்புக்கு மிக முக்கிய காரணம். (ஆதாரம் 12) (ஆதாரம் 13)
அதேபோல் உயர் குருதி அழுத்தமானது Cardiomegaly எனும் நிலையை உருவாக்கி இதயத்திற்கு அதிக வேலைச் சுமையை ஏற்படுத்தி செயலிழக்கச் செய்கிறது.
( சீனி, பிரஷர் இரண்டுமே நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு மிக முக்கிய காரணிகள். (ஆதாரம் 14))
07. உடல் நிறை அதிகரித்தல்:-
உடற்பயிற்சியின்மை, உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல்நிலை அதிகரிக்கிறது. அதிகரித்த உடல் நிலையானது Heart attack க்கு இட்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம். (ஆதாரம் 15) (ஆதாரம் 16)
08. புகைத்தல்:-
இதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
09.உடனடி மருத்துவ சேவை பெறாமை:-
பலருக்கு மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக நெஞ்சு வலி ஏற்பட்டாலும் அதனை சாதாரண Gastritis என்று நினைத்து சில வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டு கவனிக்காது விடுகின்றனர்.
இது உண்மையில் மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி தென்படும் Golden time. உயிரை காப்பாற்றுவதற்குரிய சிறந்த நேரம் அதனை தவறவிடுவது மரணத்தையே கொண்டு சேர்க்கும்.
10. நேபாளிகளின் மரணத்திற்கு காரணமாக கருதப்படும் சன நெரிசல் மிக்க காற்றோட்டம் குறைந்த அறைகள், போஷாக்கின்மை, சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள் போன்ற பல காரணங்களும் இதில் அடங்குகின்றன. (ஆதாரம் 8)
வெளிநாடு சென்றுவிட்டால் பணப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இங்குள்ளோர் எண்ணுகிறோம். ஆனால் அங்கு அவர்கள் படும் சொல்லொனாத் துயரங்களை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் அடிப்படை வசதிகள் இன்றி நவீனகால அடிமைகளாய் கசக்கி பிழியப்படும் நம் சகோதரர்களின் பல உடல்கள் கூட உறவினர்களை வந்தடைவதில்லை. 😢😢
இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு:
References:- (ஆதாரங்கள்)
01. Sri Lanka migrant workers topped 1.1 million 2016: minister
https://economynext.com/Sri_Lanka_migrant_workers_topped_1.1_million_2016__minister-3-8171-.html
02.More than 600 Sri Lankan migrant workers died annually- Minister
http://www.dailymirror.lk/article/Over-migrant-workers-die-annually-abroad-State-Min–153213.html
03.Record deaths of migrant workers in 2010
http://www.sundaytimes.lk/101226/News/nws_02.html
04.Cause of death of Sri Lankan migrant workers employed in the Middle East
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1618473/
05.Rising number of housemaid deaths alarms Sri Lanka
http://www.arabnews.com/news/548981
06.More skilled Sri Lankan workers go abroad for work
http://www.colombopage.com/archive_17B/Sep25_1506325209CH.php
07.Indian migrant worker dies after leaving Qatar World Cup venue
https://www.reuters.com/article/us-qatar-worldcup-labour-idUSKCN18E2XR
08. Increasing number of deaths among Nepali workers
09. Long working days can cause heart problems, study says
10. Nine Ways Stress Is More Dangerous Than You Think
https://www.healthline.com/health-news/mental-eight-ways-stress-harms-your-health-082713
11. A Single Session of Meditation May Reduce Anxiety and Help Your Heart
https://www.healthline.com/health-news/single-session-of-meditation-reduce-anxiety-and-help-heart#1
12. A silent myocardial infarction in the diabetes outpatient clinic: case report and review of the literature
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3921998/
13. Silent Heart Attack
https://www.diabetesselfmanagement.com/diabetes-resources/definitions/silent-heart-attack/
14.கிழக்கு மாகாணத்தையும் கதி கலங்க வைக்கும் KIDNEY FAILURE எனும் சிறுநீரக செயலிழப்பு
https://lankahealthtamil.com/கிழக்கு-மாகாணத்தையும்-கத/
15.Relationships between Obesity and Cardiovascular Diseases in Four Southern States and Colorado
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3250069/
16.Obesity Increases Risk of Deadly Heart Attacks
https://www.webmd.com/heart-disease/news/20110214/obesity-increases-risk-of-deadly-heart-attacks#1