Ads Area

சம்மாந்துறையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் மீறுபவர் மீது சட்ட நடவடிக்கை.

ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேசத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அதனை மீறுபவர் மீது இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்கள் கூடுதலானோர் இனங்காணப்பட்டதனையடுத்து,  சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான  கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம். நேற்றுமுன்தினம்(28) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றபோது மேற்படி தீர்மானம் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம். கபீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர், சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ. சபூர்த்தம்பி, உதவி பிரதேச செயலாளர் எம்.எம். ஆசீக், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி எம்.எம். மஹ்ருப், சம்மாந்துறை வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.எல்.சுலைமாலெவ்வை, பிரதேச செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் எம்.ஏ.மஜீட், சுகாதார மேற்பார்வை பரிசோதகர் ஐ.எல்.றாசீக், மத நிறுவனங்களின் பரிபால சபையினர், கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக எல்லைக்குள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் கள விஜயங்களை மேற்கொண்டு சுகாதார வழிமுறைகள்  தொடர்பில் ஆராய வேண்டும். தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்புக் குழுவிலுள்ள ஒவ்வொரு அதிகாரியும் வாரத்தின் ஒவ்வொருநாளும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.

தேவையில்லமல் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது, திருமண மற்றும் மரண வீடுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்த வேண்டும். வெளியூரிலிருந்து வியாபாரத்துக்கு வருவோரின் விபரம் பதியப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படல் வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். இதேவேளை அரசாங்கத்தின் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். தவிர்த்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் கூறப்பட்டது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது ஒரு தனி மனிதனால் மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒரு காரியமல்ல. அது ஒரு சமூகக் கடமையாகும். சமூகத்தில்  உள்ள அனைவரும் ஒன்றுபட்டு சுகாதார வழிமுறைகளைப் பேணி கொரோனாவை விரட்டியடிக்க முற்படுதல் வேண்டும். ஒவ்வொருவரும் கொரோனாவை ஒழிப்பதில் தனது வகிபாகத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். என பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா  கருத்துத் தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe