Ads Area

எதிர்வரும் திங்கட்கிழமை நீதித்துறையில் இலங்கை முஸ்லிம்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

”தாமதிக்கப்படும் நீதி , மறுக்கப்பட்ட நீதியாகும்!”

எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை நீதிமன்றம் நடந்து கொள்ளும் முறையில்தான், இலங்கையின் நீதித்துறையிலும் இலங்கை முஸ்லிம்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

கடந்த காலங்களில் பெருமளவிலான சந்தர்ப்பங்களில் இலங்கை நீதித்துறை ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும், இனவாத நோக்கிலும் தனது தீர்ப்புகளை வழங்கியே வந்துள்ளன. அரசாங்கத்தின்

முடிவுகளை கேள்விக்குற்படுத்திய நீதித்துறை தீர்ப்புகள் இல்லை என்று சொல்ல முடியாது, ஆனாலும் அதனை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இறந்த முஸ்லிம்களின் உடலை எரிக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை , கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்துதான் விசாரணைக்கே எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் மக்கள் பிரிவினரில் ஒரு பகுதியினர் தமது கலாசார, மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்து தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுப்பதற்கே 6 மாதங்களுக்கு மேல் எடுத்திருக்கிறது என்றால், இலங்கையின் நீதித்துறை இந்த உணர்வுபூர்வமானதும்,

உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டியதுமான விடயத்தினை இட்டு, எவ்வளவு அசிரத்திரையாகவும் பாராமுகமாகவும் இருந்திருக்கிறது என்பது வெட்கக்கேடுதான்.

கொரோனாவைக் காரணம் காட்டி நீதிமன்ற விசாரணையை தள்ளிப்போட நீதித்துறை கதை சொல்ல, அதே கொரனாவை காரணமாக வைத்து , இறந்த உடல்களை இலங்கை அரசாங்கம் எரித்து வருகிறது. எரிப்பதற்கும் காரணம் கொரோனா, எரிப்பதற்கு எதிராக நீதி கேட்பதையும் தடுப்பதும் கொரோனாதான்.

இதனை இலங்கை அரசாங்கத்தினதும், இலங்கை நீதித்துறையினதும் “ இனவாதத்தின் கொரோனா” என தெளிவாக சொல்ல முடியும். ஆளும் அரசாங்கத்திடமிருந்து நீதி கிடக்காத நிலையில்தான், பாதிக்கப்படும் மக்கள் தரப்பு நீதித்துறையை நாடியது.

உண்மையில் இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக செயற்படும் தன்மையுடன் இருந்திருந்தால், கொரோனாவைக் காட்டியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுப்பதை தள்ளிப் போட்டிருக்காது. பாதிக்கப்படுவதற்கான காரணியே (கொரோனா), நீதி மறுக்கப்படுவதற்கும், நீதி தாமதிக்கப்படுவதற்குமான காரணியாகக் காட்டப்படுவது இலங்கையின் நீதித்துறையின் முகத்தை அப்பட்டமாகவே அழுக்காக்கியே உள்ளது.

உண்மையில் இது முஸ்லிம்களுடன் மட்டும் சம்பந்தப்பட்ட , அவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் மீறும் விடயமல்ல, இலங்கை கிறிஸ்தவ சமூகமும் இதில் பாதிக்கப்பட்டுள்ளது. இரு கத்தோலிக்கர்களும் அடிப்படை மனித உரிமை வழக்கை தாக்கல் செய்துள்ளனர். சிலாபத்தில் ஒரு கிறிஸ்தவ ஏழைத்தாய், தனது மகன் எரிக்கப்பட்டதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடினார்.

இப்போதும் இந்த வழக்கை இலங்கை நீதித்துறை, கண்ணை விழித்து, விசாரணைக்கு எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுக்களை விசாரணக்கு எடுக்க வேண்டுமென , சபீனா மஹ்ரூப் என்கிற ஒரு சட்டத்தரணி பிறிதொரு மனுவை தாக்கல் செய்த பின்னரே, இவ்வழக்கு கடந்த வியாழன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த விசாரணையை மீண்டும் ஒத்திப்போடவும் இந்த கொரோனாவைத்தான் காரணம் காட்டியுள்ளனர்.

எதிர்வரும் திங்கள்கிழமை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யார் எரிப்பதை சட்டமாக்கினர்?

இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை என இன்னும் விவாதிப்போர்,நம்பிக் கொண்டிருப்போர் இருந்தால் அதனைவிட முட்டாள்தனம் வேறில்லை. எரிப்பதை பிரகடனப்படுத்தியேதே இந்த இனவாத ,எதோச்சதிகார அரசாங்கம்தான்.

கடந்த ஏப்ரல் 4ம் திகதியிடப்பட்ட, இலங்கையின் சுகாதார அமைச்சரும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அருமைத் தங்கையுமாகிய பவித்திரா வன்னியாரய்ச்சியின் உத்தரவுப்படியேதான் உடலை எரிக்கும் இந்த இனவாத வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்க வேண்டும் என்றுதான் இந்த அனைத்து அடிப்படை உரிமைமீறல் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக 3 பேர்

குறிக்கப்பட்டுள்ளனர்.

01. சுகாதார சேவைகள் அமைச்சர்,

02. சுகாதார சேவைகள்

பணிப்பாளர்,

03. சட்டமா அதிபர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகள், மிகத் தெளிவாகவே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உட்பட, இலங்கை மனித உரிமை ஆணக்குழு ஆகியன இலங்கை அரசாங்கத்தினையே இதில் குற்றம்சாட்டி உள்ளது.

ஆகவே இன்னும் இந்த விடயத்தில் யாரும் இலங்கை அரசாங்கத்திற்கு வெள்ளை அடிப்பது வீணாண செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இலங்கை மனித உரிமை ஆணக்குழு தனது அறிக்கையில் , பல விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளன. அதில் சொல்லப்பட்டவைகளில் இதனுடன் தொடர்பு பட்ட சில பந்திகள் (விடயங்கள்) கீழ்வருமாறு உள்ளன.

”-வர்த்தமானியை திருத்தி அடக்கம் செய்ய உடன் அனுமதி வழங்குக

-பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தினுள் வழங்கப்பட வேண்டும்.

-வீடுகளில் இறப்பவர்களின் சடலங்களை பொலிஸ் பிரேத அறைக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

-கொவிட் 19 உயிரிழப்புகள் விடயத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

-கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் உடல்கள் தகனம்செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் .

கடந்த 2020 நவம்பர் 9 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்றாக இனங்காணப்பட்ட 35 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இவற்றில் 17 உடல்கள் முஸ்லிம்களுடையதாகும்.

சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக வீடுகளிலிருந்து தகனம் செய்யப்படுவதற்கு முன்பு கொழும்பு தேசிய வைத்தியாசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர்களின் உடல்களில் பி.சி.ஆர். பரிசோதனை சில சந்தர்ப்பங்களில் நடத்தப்படவில்லை என்றும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு மாறானதாகும். அத்தோடு பல சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இறந்து 48-72 மணித்தியாலயங்களின் பின்பே வழங்கப்பட்டுள்ளன.அதற்கு முன் உடல்கள் எரிக்கப்பட்டு விடுகின்றன.

தகனம் செய்யப்பட்ட இரு முஸ்லிம் ஜனாஸாக்களின் பெயர்கள், கொவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகாதவர்கள் என்பதை அரசாங்கமே இந்த நீக்கல் மூலம் ஏற்கிறது.

மேலும் வீடுகளில் மரணித்த சிலருக்கு வைரஸ் தொற்றியிருக்கவில்லை. அவர்கள் பலவீனம் காரணமாக வீட்டினுள்ளே இருந்துள்ளார்கள். அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் வீட்டினுள்ளே இருந்துள்ளார்கள்.

தகனம் செய்யப்பட்டவர்கள் சிலர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை என அறிய முடிகிறது. ஏனென்றால் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு 14 நாட்களுக்குள் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. அவர்கள் சுகாதார அதிகாரிகளால் வைரஸ் பரிசோதனை உட்படுத்தப்படவுமில்லை எனத் தெரிவித்துள்ளது. ” என இந்த அறிக்கை அழுத்தம் திருத்தமாக குறித்துரைக்கிறது.


யார் நீதிமன்ற தீர்ப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தும் இரு தரப்புகள்?

முதல் தரப்பு

01. இலங்கையின் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைப் பகுதிகள்

02. உலக சுகாதரா ஸ்தாபனத்தின் அறிக்கை
03. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள்

04. இலங்கை மனித உரிமை ஆணக்குழுவின் வெள்ளிக்கிழமை வெளியான மிகத்
தெளிவான அறிக்கை

இரண்டாம் தரப்பு ( எதிர்த் தரப்பு)

01. இலங்கை அரசாங்கம்

02. இலங்கையின் சிங்கள இனவாத அமைப்புகள்

03. பல்கலைக்கழக, மருத்துவ துறைசார் சிங்கள இனவாத கல்விப் பிரிவினர்..

இந்த வழக்கின் அடிப்படையைப் பார்த்தால், இலங்கை சுகாதார அமைச்சும், சட்டமாஅதிபரும் தங்களது ஆட்சோபனையை தெரிவிக்காது விட்டாலே , நீதிபதிகள் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அதில் திருத்தம் செய்ய தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை செய்யுமா என்பதே கேள்வி.???

இன்னும் ஏன் உங்கள் அரசியல், ஆளும் , ஒடுக்கும் தரப்பின் தயவில் , அவர்களது சப்பாத்துக் கால்களை துடைத்துக் கொண்டிருக்கிறது??????.

எரித்தது எரித்ததுதான்...,உடல்களை மட்டுமல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனங்களையும் தான். அந்தக் கறையை யாராலும் துடைக்க முடியாது!

நீங்கள் வகிக்கும் அமைச்சுப் பதவிகளும், இன்னும் அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆதரவு அரசியலும் , இதனை ஒரு போதும் ஈடு செய்யாது!




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe