Ads Area

அக்கரைப்பற்று மாநகரத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறை - முதல்வர்

நூருல் ஹுதா உமர்

"தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக ,வியாபார நிலையங்கள் , விவசாய நிலங்களுக்கு செல்லுதல் , வீதிகளில் நடமாடுதல் என்பவற்றை முற்றிலுமாக எமது மக்களின் நலனுக்காக சில தினங்கள் தவிர்ந்து இருங்கள் என்று வினயமாக கேட்கின்றேன். தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறை படுத்தபட இருப்பதால் வீணான அசெளகரிகத்தை தவிருங்கள். விரைவில் உங்களின் அன்றாட தேவைகளை கடந்த காலத்தைப்போல் உங்களின் காலடியில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுகின்றது ஆதலால் பொறுமையுடன் காத்திருங்கள் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் ஆகியோர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அக்கரைப்பற்றில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவர்கள்  விடுத்துள்ள விசேட அறிக்கையிலையே அவர்கள் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும் அந்த அறிக்கையில்,

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் கண்டறியப்பட்ட கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கையானது எம் எல்லோரையும் ஒரு கணம் ஆட்டம் காண வைத்துள்ளது. அத்துடன் ,அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பீ .சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளும் கவலை தருபவையாக இருந்தது .மேலும் இன்னும் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்க இருக்கின்றது .

இந்த நிலையில் நாம் எல்லோரும் தூர நோக்கோடும் , சாதூர்யமாகவும் , அர்பணிப்புடனும் நடந்து கொள்வதனால் மாத்திரமே இந்த சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம் என்ற அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற பொறுப்பு வாய்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில்

"தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்.

இத் தீர்மானமானது எமது மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால் இந்த ஆபத்தான நிலைமையின் அளவை எங்களால் அறிந்து கொள்ள ஒரு அவகாசமாக குறுகிய சில நாட்களின் தேவை இருப்பதால் பொறுமையுடனும் , அர்பணிப்புடனும் நாம் எல்லோரும் அதனை ஏற்று நடந்து கொள்ள கேட்கின்றோம். மருந்தகங்கள் கூட ஒரு பிரதேசத்தில் ஒன்றுதான் திறந்திருக்கும்.

மேலும் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் கிரமமாக தொடரும். ஆனால் உங்களின் வீட்டு கழிவுகளை முறையாக பொதி செய்து  அதை ஏற்றிச்செல்ல வரும் வாகனத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை சிரமம் பாராது ஏற்றுக்கொள்ள கேட்கின்றோம். எனவே இந்த அசாதாரண சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்புடன் வெற்றி கொள்ள எல்லோரும் கருமமாற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டு, உங்கள் எல்லோருக்காகவும் பிரார்த்திக்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe