கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 401 இலங்கையர்கள் மூன்று விமானங்களின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 50 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் நேற்றிரவு 11.12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் ஜனாதிபதியின் சிறப்பு உத்தரவின் பேரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்புக்காக சென்ற 275 இலங்கையர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இலங்கை ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் கட்டுநாயக்க, விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் ஐ.நா. அமைதி காக்கும் படைகளில் பணியாற்றுவதற்காக பல்வேறு ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்ற 76 இலங்கை இராணுவ வீரர்களும் எத்தியோப்பிய ஏயர்லைன்ஸ் மூலமாக அதிகாலை 3.57 மணியளவில் கட்டுநாயக்க, விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர்.சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.