வை எல் எஸ் ஹமீட்
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் நீதிமன்ற அவமதிப்பிற்காக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிப்பது நாமறிந்ததே.
இன்று எழுகின்ற கேள்வி அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழப்பாரா? என்பதாகும். இது தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியலமைப்பு சரத்து 89 சில தகைமையீனங்களைக் குறிப்பிட்டு இந்தத் தைகைமையீனங்களுள் ஏதாவதொன்றிற்கு ஒருவர் உட்படும்போது அவர் எந்த ஒரு தேர்தலிலும் ஒரு வாக்காளராக இருக்க முடியாதென்கிறது. இதன் உப சரத்து (d) சிறைத் தண்டனை அனுபவிக்கின்ற அல்லது அனுபவித்த ஒருவர் வாக்காளராக இருக்கும் தகைமையை இழப்பதுபற்றிப் பேசுகின்றது.
சரத்து 91 பல தகமையீனங்களைக் குறிப்பிட்டு அவற்றில் ஏதாவதொன்றிக்கு ஒருவர் உட்படும்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிசெய்யப்படவோ அல்லது பாராளுமன்றத்தில் அமரவோ, வாக்களிக்கவோ முடியாதென்கிறது. இதன் உப சரத்து (a) ஆனது சரத்து 89 இல் குறிப்பிடப்பட்ட தகைமையீனத்திற்கு ஒருவர் உட்படும்போது அது மேற்குறிப்பிட்டபடி பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட, அதில் அமர, வாக்களிக்க முடியாத ஒரு தகைமை என்பதாக குறிப்பிடுகிறது.
அதாவது ஒருவர் 89 இன் பிரகாரம் வாக்காளராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டால் 91 இன் பிரகாரம் அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவோ, பாராளுமன்றில் அமரவோ, வாக்களிக்கவோ முடியாது.
அதேநேரம் சரத்து 66 (d) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்படி சரத்துக்கள் 89 அல்லது 91 இல் குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு தகைமையீனத்திற்கு உட்பட்டால் அவரது பாராளுமன்ற ஆசனம் வறிதாகிவிடும்; என்கிறது.
எனவே, இவற்றின் சுருக்கம் குறித்த பாராளுமன்ற உறுப்பினருடைய விடயத்தைப் பொறுத்தவரை 89(d) இன் பிரகாரம் அவர் வாக்காளராக இருக்கும் தகுதியை இழக்கின்றாரா? என்பதுதான்.
எனவே, 89(d) ஐ சற்று ஆழமாக ஆராய்வோம்.
89(d) பின்வருமாறு கூறுகின்றது;
“ if he is serving or has during the period of seven years immediately preceding completed serving of a sentence of imprisonment ( by whatever name called)for a term not less than six months imposed after conviction by any court for an offence punishable with imprisonment for a term not less than two years.....”
இதன் பொருள்; அவர் அனுபவித்துக்கொண்டிருந்தால் அல்லது உடனடியாக முன்செல்லுகின்ற அதாவது தற்பொழுதிலிருந்து முந்திய ஏழு வருடத்திற்குள் இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றத்திற்கு 6 மாதங்களுக்கு குறைவில்லாத ஒரு காலப்பகுதிக்கு தண்டனை அனுபவித்து முடிந்திருந்தால் அவர் வாக்காளராக இருக்கும் தகைமையை இழக்கின்றார்; என்பதாகும்.
தற்போது இது தொடர்பாக இரு கேள்விகள்
விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன. ஒன்று அவர் ஆறு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து முடித்திருக்க வேண்டுமா? என்பது ஒன்று. இவர் செய்த குற்றம் இரு வருடங்களுக்கு குறையாத தண்டனை வழங்கப்படக்கூடியதா? என்பது இரண்டாவதாகும்.
ஆறு மாதங்கள் அனுபவித்தல்
இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று if he is serving அதாவது “ அவர் அனுபவித்துக் கொண்டிருந்தால்” அடுத்தது if he has during the period of seven years immediately preceding completed serving of அதாவது “ உனடியாக முன்செல்லுகின்ற ( அதாவது தற்பொழுதில் இருந்து) முதல் ஏழுவருடத்திற்குள் அனுபவித்து முடித்திருந்தால்”
எதை அனுபவித்துக்கொண்டிருந்தால் அல்லது அனுபவித்து முடித்திருந்தால்? பதில் a sentence of imprisonment அதாவது “ சிறைத்தண்டனையை”.
இங்கு “சிறைத்தண்டனையை” என்பது இரண்டாவது பகுதிக்கு மட்டும் உரியதா? இரண்டு பகுதிக்கும் உரியதா? சந்தேகமில்லாமல் இரு பகுதிக்குமுரியது. இரண்டாவது பகுதிக்கு மட்டுமே உரியது என்றால் முதலாவது பகுதியில் “ அனுபவித்துக்கொண்டிருந்தால்” என்பது எதை? அது சிறைத்தண்டனையை இல்லையா? என்ற கேள்வி வந்துவிடும்.
இப்பொழுது இரண்டு பகுதியினது பொருள் கோடலையும் பார்ப்போம்.
முதல் பகுதி- சிறைத் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தால், இரண்டாம் பகுதி-சிறைத்தண்டனையை அனுபவித்து முடித்திருந்தால், என்பது பொருள் கோடலாகும்.
அடுத்த கேள்வி- எப்படிப்பட்ட அல்லது எவ்வளவு காலத்திற்கான சிறைத்தண்டனை? பதில்
for a term not less than six months அதாவது 6 “மாதத்திற்கு குறையாத காலப்பகுதி” எது குறையாத? பதில் “ சிறைத் தண்டனை”. சிறைத் தண்டனை என்ற சொல் இரண்டு பகுதிக்கும் என்றால் “6 மாதத்திற்கு குறையாத” என்பதும் இரு பகுதிக்குமாகத்தானே இருக்கவேண்டும்.
இப்பொழுது பொருள் கோடல் செய்தால் முதல் பகுதி- “6 மாதத்திற்கு குறையாத காலப்பகுதியில் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தால்” என்றும் இரண்டாம் பகுதி- “6 மாத காலம் தண்டனையை முடித்திருந்திருந்தால்” என்று வரும்.
இங்கு சிலருடைய வாதம் இந்த ஆறுமாதம் என்பது முதல் பகுதிக்கு உரியதல்ல; என்பதாகும். அந்த வாதத்திற்கு காரணம் “if he is serving “ தற்போது அனுபவித்துக்கொண்டிருந்தால்; என்று இருப்பதனால் ( present continuous tense) 6 மாதம் என்பது அதற்குரியதல்ல; என்பதாகும்.
இலக்கண விளக்கம்
இதை இலக்கண ரீதியாகப் பார்த்தால், ஆங்கில இலக்கணத்தில் “or” என்ற சொல் Distributive Conjunction என அழைக்கப்படும். அது இரு சமமான விடயங்களையே பங்கீடு செய்யும். “ if he is serving “ என்பது ஒரு clause ( adverbial cause) ஆகும். அடுத்த clause “ if he has during the period of seven years immediately preceding completed serving of” அதாவது , முதல் ஏழுவருடங்களுக்குள் அனுபவித்து முடித்திருந்தால்”, மிகுதி இரண்டிற்கும் பொதுவானவாதாகும்.
எனவே, “or” என்ற இரண்டு subordinate clause களை பங்கீடு செய்கிறது. இதில் “ if he “ என்பது இரண்டாவது clause இல் விடுபட்டதற்கான காரணமே “or” என்பது ஒரு distributive clause. இரண்டு சமமான விடயங்களை பங்கீடு செய்கின்றது. அவ்வாறு சமமான விடயங்களை பங்கீடு செய்யும்போது இரண்டிலும் ஒரே விசயங்கள் மீண்டும் குறிப்பிடப்படப்படுவதை ( repetition) தவிர்ப்பது பொதுவானதாகும்; ஆனாலும் கட்டயாமில்லை. ( coordinate conjunctions இற்கும் இதே விதிதான் ஆனாலும் சிறிய வித்தியாசம் இருக்கிறது; அது இங்கு அவசியமில்லை).
எனவே,இலக்கணப்படி, serving of, என்பதற்கு பின்னால் வருகின்ற அனைத்தும் இரண்டு clauses இற்கும் பொதுவானதாகும்.
இலக்கண அடிப்படையில் பார்த்தோம். அடுத்ததாக சட்ட வியாக்கியான அடிப்படையில் பார்ப்போம். ஏற்கனவே, அவர் தண்டனையை அனுபவித்திருந்தால் 6 மாதங்கள் குறையாமல் அனுபவித்திருக்க வேண்டும். ஒரு நாள் குறைவாக அனுபவித்திருந்தாலும் அவர் வாக்காளராக இருக்கும் தகைமையை இழக்கமாட்டார்; ஆனால் தற்போது அனுபவிப்பவராக இருந்தால் ஒரு நாள் தண்டனையை அனுபவித்தாலும் அவர் வாக்காளராக இருக்கும் தகைமையை இழக்கின்றார்; அதனால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கின்றார்; என்பது நியாமாகுமா? சட்டத்தின் நோக்கம் பாகுபாடு காட்டுவதாக இருக்கமுடியுமா? அது Rule of Law தத்துவத்திற்கு முரணானதல்லவா?
எனவே, 6 மாதம் தண்டனை அனுபவித்திருக்க வேண்டும்; என்பது ரஞ்சன் ராமநாயக்காவுக்கும் பொருந்தும். உண்மையில் “if he is serving “ என்பது “if he has been serving “ என்று வந்திருக்க வேண்டும். சில நேரங்களில் அவ்வாறு நிகழ்வதுண்டு. ஆனாலும் அதனை “if he has been serving “ என்றுதான் வாசிக்கவேண்டும். சட்டத்தில் “May” என்று இடம்பெறும் சொல்லை “shall “ என்று பொருள்கோடல் செய்த தீர்ப்புகள் இருக்கின்றன.
அடுத்தாக, இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனைக்குரிய குற்றத்தை அவர் புரிந்திருக்க வேண்டும்; என்பது. அதாவது, 89(d) யின் பிரகாரம் அவர் “இரண்டு வருடங்களுக்கு குறைவில்லாத தண்டனை வழங்கக்கூடிய ஒரு குற்றத்திற்காக குற்றவாளியாக காணப்பட்டு ஆறு மாதங்கள் தண்டனை அனுபவித்திருந்தால் ( முதல் ஏழு வருடங்களுக்குள்) அல்லது ஆறு மாதங்களாக அனுபவித்துக்கொண்டிருந்தால் மட்டுமே அவர் வாக்காளராக இருக்கும் தகுதியை இழப்பார்.
இது இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனை வழங்கக்கூடிய குற்றமா?
இலங்கையில் நிதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தனியான சட்டமில்லை. உயர்நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கி இருப்பது அதற்கு சரத்து 105(3) ஆல் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிராகாரமாகும். இச்சரத்து, நீதிமன்ற அவமதிப்பிற்கு “சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும்” என்றுதான் கூறுகின்றதே தவிர, எவ்வளவு காலம் என்றோ அல்லது எவ்வளவு காலத்திற்கு குறையாத என்றோ கூறவில்லை. அது நீதிமன்றத்தைப் பொறுத்தது.
உதாரணமாக, ஏதாவது ஒரு குற்றத்திற்கு ஒரு வருடத்திற்கு குறையாத தண்டனை வழங்கப்படவேண்டுமென சட்டம் கூறினால் நீதிமன்றம் ஒரு வருடத் தண்டனையும் வழங்கலாம்; அதற்குமேல் அது பொருத்தம் எனக்கருதுகின்ற எத்தனை வருடங்களுக்குமான தண்டனையும் வழங்கலாம். அத்தண்டனை எத்தனை வருடங்களாக இருந்தாலும் அவர் வாக்களராக இருக்கும் தகுதியை இழக்கமாட்டார். ஏனெனில் அது இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனை; என்ற வரையறைக்குள் வரவில்லை.
எனவே, இதன் சுருக்கம் ராமநாயக்காவின் தண்டனை 89(d) இற்குள் வரவில்லை. எனவே, இத்தண்டனை காரணமாக அவரது பதவி பறிபோகமுடியாது.
குறிப்பு:
இங்கு இன்னுமொரு வாதத்தை முன்வைக்கலாம். அதாவது “ 6 மாதத்திற்கு குறையாத காலப்பகுதி என்பது அனுவிக்கின்ற அல்லது அனுபவித்த காலப்பகுதியல்ல மாறாக தண்டனை விதிக்கப்பட்ட காலப்பகுதி; ராமநாயக்காவைப் பொறுத்தவரை அவரது தண்டனைக் காலப்பகுதி 4 வருடங்கள். அதாவது, ஆறுமாதங்களைவிட அதிமானது. எனவே, அவர் 89(d) இன் கீழ் வருவார்; என்றொரு வாதத்தை முன்வைக்கலாம்.
இது சரியென்றால் ஒருவருக்கு ஏழு மாதம் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் பதவி இழப்பார்; என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இது முரணான வாதம். ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றத்திற்கு அவ்வாறு இரண்டு வருடங்களுக்கு குறைவாக தண்டனை வழங்கப்பட முடியாது.
89(d) இன் இப்பகுதி இரண்டு வருடங்களுக்கு குறையாத தண்டனை அளிக்கப்படக்கூடிய குற்றத்தைப்பற்றியே பேசுகின்றது. எனவே, ஆறுமாதத்திற்கு குறையாத தண்டனை விதிக்கப்படுதல் என்ற வியாக்கியானம் இங்கு பொருந்தாது; என்பதைக் கவனத்திற்கொள்க.