தமிழ் நாட்டின் மேலூர் அருகே சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முத்துசாமிபட்டி சுமதிபுரத்தை சேர்ந்த சரவணன் – தவமணி தம்பதியின் மூத்த மகன் சந்துரு. இவர் அருகில் இருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த நிலையில் வீட்டின் விட்டத்தில் சேலையால் தொட்டில்கட்டி விளையாடிய போது, கழுத்தில் சேலை முறுக்கி பேச்சுமூச்சில்லாமல் கிடந்துள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், 3 பிள்ளைகளுடன் தாய் வசித்து வருகிறார்.
தொட்டில் விளையாட்டால் விபரீதம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.