சம்மாந்துறை அன்சார்.
கத்தார் சவுதிக்கு இடையிலான 4 வருட பயணத் தடை காரணமாக கத்தாரில் வசிக்கும் தனது சகோதரியை பார்க்க முடியாமல் தவித்து வந்த சவுதியைச் சேர்ந்த காலித் அல் - கஹ்தானி (Khalid Al Qahtani) என்ற இளைஞர் ஒருவர் நேற்று கத்தாரிலிருந்து சவுதிக்கு வந்தடைந்த தனது சகோதரியை றியாத் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சந்தித்து ஆரத்தழுவிக் கொண்ட நிகழ்வு பார்ப்போரை நெகிழச் செய்திருந்தது.
கத்தார் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்சியம், எகிப்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் கத்தாருடனான சகல தொடர்புகளையும் துண்டித்து, போக்குவரத்துக்கான எல்லைகளையும் மூடியது. சவுதி அரேபியாவும் கத்தாருடனான சகல தொடர்புகளையும் துண்டித்து, பயணத்தடைகளையும் விதித்திருந்தது.
இதனால் கத்தார் மற்றும் சவுதியில் உள்ள தங்களது உறவினர்களை பார்க்க முடியாது இரு நாட்டவரும் தவித்து வந்தனர். இந் நிலையில் தற்போது சுமார் நான்கு வருடங்களாக அமுலில் இருந்த கத்தார் சவுதிக்கு இடையிலான பணத்தடை நீக்கப்பட்டு எல்லைகளும் திறந்து விடப்பட்டதனால் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதாக இரு நாட்டவர்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
காலித் அல் - கஹ்தானி (Khalid Al Qahtani) என்ற சவுதியைச் சேர்ந்த இளைஞர் தனது சகோதரியை 4 வருடங்கள் காணாமல் தவித்ததாகவும் தற்போது எல்லைகள் திறந்து விடப்பட்டமையினால் தனது சகோதரியை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.