சீனாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்களில் பிரபலமானது அலிபாபா நிறுவனம். இதனை நிறுவிய ஜாக் மா இதன் கிளைகளை பல்வேறு நாடுகளுக்கும் பரப்பி வருகிறார். இந்நிறுவனம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஜாக் மாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அலிபாபா நிறுவன வளர்ச்சியை தடுக்கும் வகையில், சில கோட்பாடுகளை சீனா வகுப்பதாக ஜாக் மா குற்றஞ்சாட்டினார். அதேபோல் பழமைவாத கோட்பாடுகளை அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அரசு அவருக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு அவரை பொது வெளியில் பார்க்க முடியவில்லை. இது உலக நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. சீன அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என பல்வேறு கோணத்தில் விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில் அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாக் மா பொதுவெளியில் தோன்றியுள்ளார். அக்டோபர் மாதத்திற்கு பிறகு அவர் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. ஆசிரியர்கள் மத்தியில் அவர் உரையாடியுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக அவர் வெளியே வராததற்கான காரணங்கள் குறித்து எதுவும் விளக்கமளிக்கவில்லை.