சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தற்போது சினிமாத் தியேட்டர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு பல மோல்களில் (mall) திரையரங்குகள் இயக்கப்பட்டு வருவதனை யாவரும் அறிந்திருப்பீர்கள். திரையரங்குகளில் அரபு மொழித் திரைப்படங்கள் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் என திரையிடப்பட்டு வருகின்றன.
தற்போது சவுதி அரேபியா கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஒன்றாக டிரைவ்-இன் சினிமா (Drive-in Cinema) தியேட்டரை தலைநகர் ரியாத்தில் திறந்திருக்கிறது.
இந்த தியேட்டர்களின் விசேடம் என்னவென்றால் நீங்கள் உங்கள் காரில் இருந்தவாறே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரையினுாடா திரைப்படங்களைக் கண்டு மகிழலாம் மேலும் உங்கள் காரில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாகக் கூட திரைப்படங்களில் ஒலி அமைப்புக்களை உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்து பார்வையிடலாம்.
சவுதி அரேபிய ரியாத் நகரில் திறந்து வைக்கப்படவுள்ள டிரைவ்-இன் சினிமா (Drive-in Cinema) அரங்கில் சுமார் 150 வரையான கார்களை நிறுத்தி வைத்து அவற்றின் உள்ளே இருந்து திரைப்படங்களைக் கண்டு மகிழலாம். உள்ளக திரையரங்குகள் போல் வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு தியேட்டர்களுக்கு உள் சென்று திரைப்படங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை நீங்கள் உங்கள் காரிலிருந்தவாறே படங்களை பார்த்து மகிழலாம்.
இத்தகைய டிரைவ்-இன் சினிமா (Drive-in Cinema) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில நாடுகளிலும் இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.