நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் பலரும் பல பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். அதாவது மாஸ்க் தடையங்கள், பல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது பலரும் அறிந்ததே. அதை தவிர்க்கவும் முடியாது. இருப்பினும் நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் பலரும் பல பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். அதாவது மாஸ்க் தடையங்கள், பல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது கண்கள் எரிச்சல் கொடுப்பது புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதோடு அரிப்பு, கண்கள் வறண்டு போதல் போன்ற பிரச்னைகளையும் சந்திக்கின்றனர்.
இந்த கண் எரிச்சல் மஸ்கை சரியான முறையில் அணியவில்லை, ஃபிட்டான மாஸ்கை அணியவில்லை என்றால் வரும் என்கின்றனர். அதாவது மாஸ்க் அணியும்போது வெளியில் விடும் மூச்சின் வெப்பம் மேல் நோக்கி பரவும் போது அவை கண்களின் ஈரப்பதத்தை உறிஞ்சி கண்களுக்கு வறட்சி , எரிச்சலை உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பிரச்னை கண்ணாடி அணிபவர்களுக்கும் உள்ளது. இந்த சமயத்தில் கண்களை கசக்கினால் கண்கள் சிவந்து எரிச்சலை அதிகரிக்கும்.
எனவே மூக்கு மற்றும் வாயை நன்கு மூடும்படியான மாஸ்கை அணிவது அவசியம். அவ்வாறு மூக்கை மூடாமல் வாயை மட்டும் மூடுவது , ஃபிட்டாக இல்லாமல் தளர்வாக அணிவது என பயன்படுத்தினால் கண்கள் எரிச்சல்தான் உண்டாகும்.
தற்போது பல வகைகளில் மாஸ்குகள் வந்துவிட்டன. அதில் மூச்சு விட ஏதுவான, ஃபிட்டான மாஸ்கை வாங்குங்கள். அதேபோல் பயன்படுத்திய மாஸ்கை வீட்டிற்கு வந்ததும் தூசி இல்லாத இடத்தில் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வையுங்கள்.
தினமும் துவைத்த ஃபிரெஷான உடையை அணிவது போல் மாஸ்கையும் ஃபிரெஷாக துவைத்த மாஸ்காக அணிந்து செல்லுங்கள். பயன்படுத்திய மாஸ்கையே தினமும் பயன்படுத்தாதீர்கள்.