Ads Area

அம்பாறையில் கடும் மழைக்கும் மத்தியில் நெல் அறுவடை ஆரம்பம் : நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விசாயிகள் கவலை.

 பாறுக் ஷிஹான் 

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியான கடும் மழைக்கும் மத்தியில் நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 63,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாயச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள அறுவடை, இயந்திரத்தின் மூலம் வெட்டப்பட்டு வருவதுடன் அறுவடைக்குத் தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரையாகி வருவதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

கொரோனா அனர்த்தத்தின் மத்தியிலும் இம்முறை இம்மாவட்டத்தில் 63,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாயச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் தனியார் கடன்களின் மூலம் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மேற்படி அறக்கொட்டித்தாக்கம் காரணமாகவும் யானைகளால் விளைவிக்கப்படும் சேதம் காரணமாகவும் தமது வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகி வருவதாகக் கூறுகின்றனர்.

யானைத் தொல்லையிலிருந்து விவசாயிகளை அரசாங்கம் காப்பாற்ற வேண்டுமெனவும் அறக்கொட்டித் தாக்கத்தால் வயல் நிலங்களைக் கைவிட்டு வெளியேறியுள்ள விவசாயிகளுக்கு தகுந்த நஷ்டயீட்டை வழங்கி கைதூக்கி விட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களில் தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வயல்கள் மூழ்கியுள்ள நிலையில், அறக்கொட்டி தாக்கம் ஏற்பட்டதால் வேளாண்மை அழுகிய நிலைக்குச் செல்வதையும் அருகிலுள்ள வயல்களை அறக்கொட்டி பூச்சி தாக்கும் நிலை உருவாகி வருவதையும் இங்கு அவதானிக்க முடிகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 03  நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் அறுவடை செய்யப்படவிருந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய  பிரதேசங்களிலுள்ள நெல் வயல்களே நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் பிரதேசத்தில் நேற்று (01) இரவு 11 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக அப்பிரதேசத்தில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில நிமிட நேரம் வீசிய இம்மினி சூறாவளி காரணமாக, விவசாயச்செய்கைக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாத நெற்பயிர்கள் நிலத்தில் வீழ்ந்து காணப்படுகின்றன. 

இதனால் அறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாயச்செய்கைக்கும் பாரியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe