சகா
சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும் அக்கட்சியில் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வி.ஜெயச்சந்திரன், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இன்று (09) இராஜினாமாச் செய்துள்ளார்.
வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், தனது இராஜினாமாக் கடிதத்தை பிரதேச சபைத் தவிசாளரிடம் இன்று கையளித்தார். அம்பாறை மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெயச்சந்திரன், தனது உறுப்பினர் பதவியை பட்டியலிலுள்ள திருமதி குலமணி தவசீலனுக்கு வழங்குமுகமாக இராஜினாமா செய்துள்ளார்.
2018.02.10 அன்று நடைபெற்ற சம்மாந்துறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சி சார்பாக ஜெயச்சந்திரன் போட்டியிட்டு 1,032 வாக்குகளைப் பெற்று உறுப்பினரானார்.
அன்றைய களநிலைவரப்படி, ஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு ஆட்சியமைக்க தேவைப்பட்டதால் அவர் கட்சியால் உப தவிசாளராக நியமிக்கப்பட்டார். அத்தருணம்; பேசிக்கொண்டதற்கமைவாக இரு வருடங்களின் பின்னர் தனது சக உறுப்பினரான அச்சிமொகமட்டுக்கு தனது உப தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்து, 2020.02.11ஆம் திகதி முதல் உறுப்பினராகப் பணியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், தன்னுடன் தனதூரில் இணைந்து தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாகநின்ற திருமதி குலமணிக்கு தனது உறுப்பினர் பதவியை ஒப்படைப்பதற்காக தற்போது இராஜினாமாச் செய்துள்ளார்.