வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 290 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
தொழில் நிமித்தம் ஜோர்தானுக்குச் சென்றுள்ள நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்களே இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.
நாடு திரும்ப முடியாத நிலையில், வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளானவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த இலங்கையர்கள் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான யூ.எல்-554 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 4.15 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு, நாடுதிரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும் முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.