Ads Area

அமைச்சர் அலி சப்ரி ஓட்டமாவடியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளில் பங்கேற்பு.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கமைய நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (10) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.

முதலில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு அபிவிருத்தி பணிகளில் கலந்து கொண்டார்.

அதில் முதற்கட்டமாக கண்டி மாவட்ட பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொரோனாவினால் மரணமடையும் உடல்களை அடக்கம் செய்யும் மையவாடிக்கு வழங்கப்பட்ட ஜே.சி.பி.இயந்திரத்தை கையளித்ததுடன் கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைம்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நாற்பது மில்லியன் ரூபாவில் அமையப்பெறவுள்ள காகிதநகர்  கொட்டடி வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' என்ற தொனிப்பொருளில் காகிதநகர் மற்றும் மீறாவோடை கிராமங்களில் அதிகார சபையின் ஆறு லட்சம் ரூபா நிதியில் பயனாளியின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இரு வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 1990ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு மீள்குடியேற்ற அதிகார சபையினால் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் ஒன்பது குடும்பங்களுக்கு ஆரம்ப கட்டமாக தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் சிற்றூழியர்களின் பதினைந்து நாட்களுக்குரிய கொடுப்பனவாகவும் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மீஸான் கட்டைகள் ஐநூறுக்காகவும் கண்டி மற்றும் கொழும்பு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தினால் மூன்று இலட்சம் ரூபா நிதி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர் அஹமட், இஷாக் ரஹ்மான், மர்ஜான் பளீல், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல்-அமீன் , உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், டாக்டர் அம்ஹர் ஹம்தானி, நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe