Ads Area

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்களை சந்தித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய செயலாளர் !

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட  உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத்தின் சிநேகபூர்வ சந்திப்பு கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை காரைதீவு மற்றும் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

தேசிய காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட காரைதீவு பிரதேச மக்களின் குறைகள், தேவைகள், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சமூக ஒற்றுமையின் தேவைப்பாடுகள் தொடர்பில் காரைதீவு பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளினால் எடுத்துரைக்கப்பட்டது. இதன்போது பாகிஸ்தானில் வாழும் ஹிந்து மக்களுக்கும் ஏனைய முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்குமிடையே உள்ள நட்பு, சகோதரத்துவம் தொடர்பில் விளக்கமளித்த பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு தவிசாளர்கள் அடங்கிய சபையினருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸிக், காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிறில் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை செயலாளர் அருணாச்சலம் சுந்தரகுமார், கல்வியமைச்சின் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் இசட். தாஜுதீன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஓய்வு பெற்ற பிரதம பொறியியலாளர் என்.டீ.எம். சிராஜுதின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நீர், மின்சாரம், கழிவறை உட்பட பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யகோரிய கோரிக்கைகளை இதன்போது பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத்திடம் அக்கரைப்பற்று தவிசாளர் முன்வைத்தார். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம். நௌஸாத்தை சிநேகபூர்வமாக சந்தித்த உயர்ஸ்தானிகராலய செயலாளர் ஆயிஷா அபூபக்கர் சம்மாந்துறை தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe