ஒரு முஸ்லிமுக்கு தன் மானம், பிறர் மானம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை. இது பற்றி நபி (ஸல் ) இப்படி சொன்னார்கள்.
“(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அது போல் உங்கள் உயிர்களும் ,உங்கள் உடைமைகளும், உங்கள் மானம், மரியாதைகளும் புனிதம் வாய்ந்தவைகளாகும்”
ஒரு மனிதனுடைய மானத்தை உயிருக்கு நிகராக குறிப்பிடுவதோடு, அதனை புனிதமானதாகவும் நபி ( ஸல் ) குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான நெஞ்சை நிமிர்த்தி நடக்குமாறு வழிகாட்டும் மார்க்கத்தில் உள்ள எம்மவர்கள் சிலரது செயற்பாடுகளை அவதானிக்கும் போது வெட்கமாக உள்ளது.
இலங்கையின் அரசியல் நாள் தோறும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதில் ஒரு அங்கமாக நேற்று பெசில் ராஜபக்ஸ பாராளுமன்றம் நுழைந்திருந்தார். இதனை எமது முஸ்லிம் பா.உறுப்பினர் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து தள்ளியிருந்தனர். அப்படி என்ன பெசில் ராஜ பக்ஸ இவர்களுக்கு செய்து கிழித்தாரோ, கிழிக்கப்போகிறாரோ தெரியவில்லை.
பெசில் ராஜபக்ஸ பாராளுமன்றம் நுழைய, மொட்டு கூட்டணிக்குள் பாரிய எதிர்ப்புக்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிக லாவகமாக சமாளித்து, தனக்கு தேவையானதை சாதித்து காட்டியுள்ளாரல்லவா? மொட்டு கூட்டணிக்குள், தனக்கு தேவையானதை செய்யும் ஆற்றல் அவரிடமுள்ளது என்பதே இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள கூடியது. அவ்வாறு எமது முஸ்லிம்களின் விடயத்தில் ஒன்றை கூட செய்து காட்டவில்லையே! அப்படி ஏதாவது ஒன்றை செய்து காட்டியிருந்தால், நாம் அவரது காலுக்கு செருப்பாக இருந்தாலும் தவறில்லை.
இந்த ஆட்சியில் ஏதாவது எமக்கு எதிராக நடந்து, அது பற்றி இவரிடம் பேச சென்றால், தான் உங்களது கோரிக்கையை ஏற்கிறேன், என்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என்ற தோரணையிலேயே பதிலளிப்பாராம். அது அவரது நடிப்பு என்பது இப்போது தெட்ட தெளிவாக புலனாகவில்லையா? மொட்டு கூட்டணிக்குள் நடந்த அனைத்தினதும் பிரதான சூத்திரதாரி இவரே தான். எமக்கு நடந்த அநியாயத்தினதும் பிரதான சூத்திரதாரி அவர் என்பதே எனது பார்வை.
இவரது வருகைக்கு சிங்கள மக்கள் பெரியதொரு வரவேற்பு கொடுத்ததாக தெரியவில்லை. தமிழ் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் எடுத்ததாகவும் தெரியவில்லை. எம்மவர்கள் உமர் ( ரழி ) போன்ற ஒருவர் ஆட்சி செய்ய வருவது போன்று புகழ்ந்திருந்தனர். அன்றைய தினம் பாராளுமன்றம் வருகை தந்திருந்த பெசில் ராஜபக்ஸ மரியாதை நிமிர்த்தம் மஹிந்த ராஜபக்ஸவை கையெடுத்து கும்பிட்டிருந்தார். எம்மவர் ஒருவர் நிர்ப்பந்தத்தில் கையெடுத்து கும்பிட்டாலும் பறவாயில்லை, எங்கோ நின்ற அவர் அதனை பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார். இதனை ஒரு பிரபல மாற்று மத ஊடகவியலாளர் நையாண்டிக்கி உட்படுத்தியுமிருந்தார். இவற்றை பார்க்கும் போது எமது சமூகத்தின் நிலை கண்டு வெட்கமாக உள்ளது.
இவர்கள் இப்படி புகழ்ந்து தள்ளுவது வேறு எதற்குமாகவல்ல. தனக்கு ஏதாவது ஒரு அமைச்சை தந்துவிடமாட்டாரா என்ற ஏக்கத்தில் தான். புலவர்கள் மன்னர்களை புகழ்வது பொற்காசுகளுக்கு தானே! அமைச்சு போன்ற பதவிகளை பெற இவர்கள் செய்துள்ள கேவலத்தை சமூகம் ஒரு பேதும் மன்னிக்க முடியாது. அதனை விட இப்படி வெளிப்படையாக புகழ்ந்து கெஞ்சுவது கேவலமாக உள்ளது. மாற்று மதத்தவர்கள் கூட எம்மை பார்த்து சிரிக்குமளவு எம்மவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன. பெசிலை புகழும் இவர்களில் அதிகமானவர்கள் சஜிதின் கட்சியில் தேர்தல் கேட்டு, வெற்றியீட்டியவர்கள். வெட்கம்.. வெட்கம்.. பெரும்பாலான முஸ்லிம் எம்.பிகள் இந் நிலைப்பாட்டில் இருப்பதால், கெஞ்சிப் பிழைப்பது முஸ்லிம்களின் பண்புகளாக ஏனைய சமூகத்தினர் கருதுவது பிழையாகுமோ? அனைவரும் குர்ஆனை படித்து, இஸ்லாத்தை அறிய முடியாதல்லவா?
இது இவர்களது தனிப்பட்ட பிரச்சினையென்றால், நாம் அதனை சந்திக்கு இழுத்து பேச தேவையில்லை. இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால், இவர்களை தெரிவு செய்த மக்களின் பண்புகளாக, இவர்களது பண்புகளை ஏனையோர் நோக்க கூடும். தயவு செய்து பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தின் மானத்தை ஏலம் விடாதீர்கள். நாம் முஸ்லிம்கள். தன் மானத்தையும், பிறர் மானத்தையும் உயிராக கருதுபவர்கள் என்பதை மனதில் நிறுத்தி செயற்படுங்கள்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.