இந்தியாவிலேயே மக்கள்தொகையில் பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிரதேசத்தில், மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு நடவடிக்கையாக, உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை உத்தரப்பிரேதச அரசு தயாரித்து உள்ளது. இந்த மசோதாவில், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் அட்டைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும், ஒரே ஒரு குழந்தையை பெற்றுக்கொள்பவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீது ஜூலை 19ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.