கடன் கொடுத்த கேஷ்டிராஜா கடனை திருப்பி தருமாறு கேட்டு ரகுவை தொந்தரவு செய்துள்ளார். கடனை வசூலிக்க அவர் வீட்டுக்கு சென்றபோது ரகுவும் அவரது மனைவிக்கு வேலைக்கு சென்றிருந்தனர். அவர்களது மூன்று மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடன் திருப்பி தர இயலாத காரணத்தினால் பெண் குழந்தைகளை வீட்டில் வைத்து கடன்தாரர் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு- அஞ்சுகம் என்ற தம்பதியினருக்கு ரித்விகா (17) சத்விகா (17) ரிஷ்கா (15) ஆகிய 3 பெண் பிள்iளைகள் உள்ளனர். ரகுவின் மனைவி அஞ்சுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகின்றார்.
கூலி தொழிலாளியான ரகு கொரோனா காலத்தில் வேலை செல்ல முடியாமல் உறவினரான பாரதியார் தெருவை சேர்ந்த கேஷ்டி ராஜா என்பவரிடம் கடந்த 18 மாதம் முன்பு 2லட்சத்து 50ஆயிரம் ரூபாயை வட்டிக்கு கடனாக பெற்றுள்ளனர்.
ஆனால் ரகுவிற்கு வேலை சரியாக இல்லாத காரணத்தினால் வட்டியை கட்ட முடியவில்லை. இதனிடையே, கடன் கொடுத்த கேஷ்டிராஜா கடனை திருப்பி தருமாறு கேட்டு ரகுவை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ரகுவும் அவரது மனைவி அஞ்சுகமும் பணிக்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டிற்கு வந்த கேஷ்டிராஜா பணம் தரவில்லை என்பதால் வீட்டில் இருந்த ரகு அஞ்சுகம் தம்பதியினரின் 3 பெண் பிள்ளைகள் மற்றும் உறவினரின் பெண் பிள்ளையான யோகேஷ்வரி ஆகிய 4பெண் பிள்ளைகளை வீட்டின் உள்ளே அடைத்து வைத்து கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனையொடுத்து ரகு மற்றும் அஞ்சுகம் ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளனர். மேலும் உடனடியாக வந்த தாய் அஞ்சுகம் இது குறித்து ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் சம்பவடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கூலி தொழிலாளி ரகு பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாத காரணத்தினால் கடன் கொடுத்த உறவினர் வீட்டை பூட்டியதாக விசாரணையில் தெரிய வந்தன.
பின்னர் இது தொடர்பாக வீட்டை பூட்டிய கேஷ்டிராஜா என்பவரை ஆரணி நகர காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் பெற்ற கடனுக்கு 3பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து பூட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: மோகன்ராஜ்- ஆரணி (https://tamil.news18.com/)