நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் அறிவியலும் வளர்ச்சி கண்டுள்ள யுகத்தில் யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சன்மார்க்க பத்வாக்களை வழிகாட்டல்களை அகிலமெங்கும் இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கி வருவோடு முஸ்லிம் உலகமும் அனுசரித்து வருவதனை நாங்கள் அறிவோம்.
மருத்துவ சிகிச்சைகளைப் பொறுத்தவரை உலக அளவில் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு பூர்வமாக அறிவு பூர்வமாக கண்டறியப்பட்டுள்ள அலோபதி ஆங்கில சிகிச்சை முறைகள் மருந்து, இரத்தம் வழங்குதல், தடுப்பூசி, சத்திர சிகிச்சை, ஆய்வுகூட பரிசீலனைகள், உறுப்பு மாற்ற சத்திர சிகிச்சைகள்,கதிர் சிகிச்சைகள் என பல ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புக்களுடன் தர நிரணயங்களுடன், ஒருமுகப்படுத்தப்பட்ட தராதரங்களுடன் சேவைகளாக மக்களின் காலடிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும், ஹோமியோ இயற்கை மூலிகை சுதேச, ஆயுர்வேத, சித்த, அக்யூபஞ்சர், யூனானி, நபிவழி மருத்துவ சிகிச்சைகளை நாட வேண்டும் என சிலர் சொல்லி வருகிறார்கள்.
மக்களை நோய்த் தோற்றிலிருந்து காப்பதற்காக போராடும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வைத்திய நிபுணர்களை கேள்விக்கு உட்படுத்துவதோடு, ஆதரவு தரும் உலமாக்களையும் கேள்விக்கு உற்படுத்துகிறார்கள்.
உலகலாவிய அளவிலும், தேசிய அளவிலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவத்துறை சார்ந்த சர்ச்சைகளை பொதுத்தளத்தில் எழுபுபுவதனால் மக்கள் குழப்பமடைகின்றனர், அவர்கள் சிகிச்சைகளை நாடுவதில் ஆர்வமின்றி இருக்கிறார்கள், நோய்வயப்படும் விகிதம், அதற்கு பலியாகும் விகிதம் அதிகரிக்கிறது.
தற்போதைய நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அல்லது அரசிடம் முன்வைக்க வேண்டிய வரலாறு நெடுகிலும் தொடரும் முடிவில்லா சர்ச்சைகளை வைத்தியர்களிடமோ உலமாக்களிடமோ முன்வைப்பதில் பொது அரங்குகளில் முன்வைப்பதில் நன்மைகள் இல்லை மாறாக தீமைகளே அதிகம் உள்ளன!
அதே போன்று மார்க்க ரீதியிலான சர்ச்சைகள் தத்தமது தனிப்பட்ட புரிதல்களை பொதுத் தளங்களில் வைத்தியர்களிடமோ, பாமர மக்களிடமோ முன்வைப்பதனை தவிர்த்து அவற்றை உலமாக்கள் அவர்களது மட்டத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் ஆராய வேண்டும்.
அஜல் முடிந்தவர்கள் மரணிப்பார்கள், தொற்று நோய் இல்லை, மருந்து செய்வது வாஜிப் இல்லை, அது சுன்னா முஅக்கதாவும் இல்லை, சகித்துக் கொண்டு இருந்தால் நன்மையும், மரணித்தால் சுவர்க்கமும் உண்டு என்றெல்லாம் மிகவும் பாமரத்தனமான கருத்துக்களை இடம் பொருள் ஏவலறியாது சிலர் பரப்பி வருகிறார்கள்.
இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள், கொள்ளை நோய்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள், அதற்கான சட்டதிட்டங்களுடன், பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமுலாக்கள் துறைகளின் ஒத்துழைப்புடன் அவை கையாளப்படுகின்றன என்பதனைக் கூட அறியாமல் பலர் நோய்த் தடுப்பு செயற்திட்டங்களுக்கு எதிராக பரப்புரைகளை செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே இவ்வாறான கருத்துக்களை பரப்பிய ஒரு அமைப்பு தடைசெய்யப்பட்டு தற்பொழுது புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன, பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுவது குறித்து ஆராயப்படுவதாக தலைமைகள் கவலை கொண்டுள்ளன.
துறைசார் நிபுணர்களின் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்று தடுப்புசிகளை தயக்கமின்றி கட்டாயம் பெற்றுக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தெளிவான வழிகாட்டல்களை தந்துள்ளது, அதன்படி தேசிய ஷூரா சபையும் துறைசார் வைத்திய நிபுணர்களும் ஏனைய சமூக அமைப்புக்களும் வைத்தியர்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
எனவே மிகவும் பொறுப்புணர்வுடன் ஒரு சமூகமாக நாம் கொவிட் 19 தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தில் பங்கெடுக்க முன்வர வேண்டும்!
அரச சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, பக்கபலமாக சுதேச வைத்தியத்துறை நிவாரண முறைகளை உரிய ஆலோசனைகளுடன் பெற்றுக் கொள்வதில் எத்தகைய தடையுமில்லை அத்தகைய சேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு அரசும் அறிவுறுத்தல் வழங்கி அமுலாக்கலும் இடம் பெற்று வருகிறது.
சுதேச மருத்துவத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தேசிய நிபுணத்துவக் கற்கைகளை கற்று நாட்டின் சட்ட வரம்புகளுக்குள் எதிர்காலத்தில் பணியாற்ற முன்வர வேண்டும்.
சர்வதேச தேசிய அங்கீகாரங்கள் பெறப்பட்ட பொதுமைப்படுத்தப்பட்ட ஆய்வுத் தராதரங்களுடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறைகள் அறிமுமாகும் வரை அதிகபட்ச உத்தரவாதமளிக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளை நாடுவதே அறிவுடமையாகும், அதுவே மார்கமுமாகும்!
அதிகம் பகிருங்கள்..
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்