ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மலரவிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக அடிமைப்பட்டு, உலகின் சகல வல்லரசுகளின் பலப்பரீட்சைக் களமாக இருந்து வந்த நாடொன்று, மிகப் பெரிய வல்லரசொன்றின் ‘மிஷன் இம்பொசிபிள்’ என்கின்ற சுலோகத்தோடு கூடிய பின்வாங்கலோடு தனது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தி யிருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதானால் தங்களது இயலாமையை ஒப்புக் கொண்டு அமெரிக்கா எனும் வல்லூறு வெளியேறுவதென்பது உலக சரித்திரத்தில் இடம்பெறப் போகின்றது. நாம் ஒரு சரித்திர சம்பவத்தின் சாட்சிகளாக அமைந்து இருக்கிறோம். ‘இன்னும் எவ்வளவு காலம்தான் அந்த நாட்டில் கால் பதித்து நின்றாலும் இறுதி முடிவு இதுவேதான்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதை நினைவு கூரலாம். ‘அந்த நாட்டில் இருந்தே தெரிவு செய்யப்பட்ட மக்களால் கட்டமைக்கப்பட்ட ராணுவம் போரிட மறுக்கும் பொழுது எங்களது ராணுவத்துக்கு அங்கே போரிட்டு மடிய எந்தவிதக் காரணமும் இல்லை’ என்கின்றார் அவர்.
அதற்கு ஒரு படி மேலே போய், ‘நாங்கள் அங்கு சென்றதே ஒசாமா பின் லாடனை கொல்வதற்காகத்தான், அதனை நிறைவேற்றி விட்டோம். இனிமேல் எங்களுக்கு அங்கு எந்த வேலையும் இல்லை’ என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. ஒசாமா கொல்லப்பட்டு பத்து வருடங்களாகி விட்டன. ஆனால் இப்பொழுது தான் தங்களது மிஷன் நிறைவேறி விட்டதாக வெள்ளை மாளிகையின் மண்டையில் உறைத்திருக்கிறது. இந்த சாக்குப் போக்கெல்லாம் கவைக்குதவாத கதைகள். அங்கே இருக்கின்ற மண்ணின் மைந்தர்கள் தங்களது சகோதரரை எதிர்த்துப் போரிடத் தயாராக இல்லை என்பது இவர்களுக்கு நன்றாக விளங்கி விட்டது.
தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத நாடுகளில் கால் பதிப்பதற்கு இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேவலமாகக் காட்சிப்படுத்தி, தங்கள் ஊடகங்கள் மூலமாக உலகம் முழுவதும் இஸ்லாமோபோபியா என்கின்ற வியாதியினை விதைத்து, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுப் பல நாடுகளுக்குள் புகுந்தார்கள். லிபியா, சிரியா, ஈராக், யெமன் என்று பல நாடுகளில் மக்கள் புரட்சி என்கின்ற பெயரில் பலவிதமான ஈனச் செயல்களில் ஈடுபட்டு, பல லட்சம் மக்களைக் கொன்று குவித்துக் கடைசியாகக் ‘கண்டது எதுவுமில்லை கண்ணே ரகுமானே’ என்று ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த யுத்தங்கள் யாவற்றிலும் பெற்றவை யாவற்றையும் ஆப்கானிஸ்தானில் மொத்தமாகத் தொலைத்திருக்கின்றார்கள், தங்களது மரியாதையையும் சேர்த்து. அவர்கள் உட்புகப் பயந்த ஒரே நாடாக ஈரான் இருக்கிறது. 1979 ம் ஆண்டு ஈரான் புரட்சியின் போது தங்களது தூதரக அதிகாரிகளை சிறைப்பிடித்து 555 நாட்கள் வைத்திருந்த ஈரானிய மாணவர் படையினை அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. ஈரானுக்கு ஒரு பாடம் படித்துக் கொடுப்பதற்காக அந்த நாட்டைச் சுற்றி ஒரு வியூகம் அமைத்தார்கள். ஒரு புறத்தில் ஈராக், மறுபுறத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அவர்களின் ஆதிக்கம் ஏற்கனவே இருந்தது. நடுவே ஈரானை துவம்சம் செய்வதே அவர்களின் ஒரேயொரு நோக்கம். ஆனால் ஆப்கான் நிலைமை சாதகமாக அமையவில்லை. காலூன்றுவதே கடினமான ஒரு விடயமாகிப் போனது. ஈரான் கூட எத்தனையோ பொருளாதாரத் தடைகளுக்கும் நடுவே இன்னும் விழுந்து விடாது நின்று பிடிக்கிறது. ஈராக்கின் பெரும் படைபலத்துடன் மேற்குலக ஆயுதங்களைக் கூட எட்டு வருட காலம் எதிர்த்து நின்ற மனவலிமை மிக்க நாடல்லவா அது?!
எல்லாவற்றுக்கும் நடுவே உண்மைகளை வெளியில் கொண்டுவருகின்ற ஊடகமாக அல்ஜசீரா உருவெடுத்து விட்டது. மேற்குலக ஊடகங்களுக்கு நடுவே அந்த ஊடகம் பல நேரங்களில் உண்மையை உலகுக்கு உரைத்தது. அவர்களின் ஊதுகுழல்களுக்கு சமமாக அது வளர்ந்த பொழுது, கட்டாருக்கு அழுத்தம் கொடுத்து அதனை மூடிவிட முயற்சி எடுத்தார்கள். முடியாமல் போகவே அவர்களின் பரகசிய கூட்டாளி சவூதி அரேபியா மூலமாகப் பொருளாதாரத் தடை கொண்டு வந்தார்கள். கட்டார் அதனை சமயோசிதமாக முறியடிக்க ஈரான் உதவி செய்தது. கட்டாரின் மேல் இன்னுமொரு விடயத்திலும் அவர்களுக்கு வெஞ்சினம் இருந்து கொண்டிருந்தது. அதாவது, ஹமாஸ் இயக்கத் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்ற ஒரே நாடு அதுதான். அது போன்று தாலிபானுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது அந்த நாடுதான். ஆனால் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கின்ற காரணத்தாலும், அந்த நாட்டுத் தலைமைத்துவம் யாருக்கும் அடிமையாகாது இருக்கின்ற காரணத்தாலும் கட்டாரை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை.
இப்படியான பின்புலத்தில் தான் தாலிபானின் வெற்றியை எடை போட வேண்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் நூறு வருடங்களுக்கு மேல் யுத்த பூமியாகவே இருந்து விட்ட காரணத்தால், அந்த மக்களால் வெளியுலக மக்கள் போன்று நாகரீகம் என்று மேற்குலகு கற்பிக்கின்ற, பெண்களைத் தாங்களாகவே ஆடைகளையச் செய்து, அவர்களின் அழகையும் கவர்ச்சியையும் காசாக மாற்றுகின்ற வித்தை அந்த மக்களை சென்றடையவில்லை. ஆண்கள் கூட கல்வியை முன்னெடுக்க முடியாதவாறு யுத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டுக் கிடக்கின்ற பொழுது பெண்களின் கல்வியை நோக்கி முன்னேறுவது நினைத்தும் பார்க்க முடியாத காரியம்.
இலங்கை போன்ற நாட்டில் கூட, சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஆண்கள் கூடக் கல்வியில் முன்னேறாத சமூகமாகவே முஸ்லீம் சமூகம் இருந்தது. பெண்கள் கல்வி கற்க முற்பட்ட பொழுதெல்லாம் வசை பாடி ஏளனம் செய்யும் சமூகமாக இருந்த மக்கள்தான் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் தலிபான்களின் பிற்போக்குத்தனம் குறித்து வழக்காடுகின்றனர். எனது தாய் திருமணம் செய்யும் பொழுது அவருக்கு வயது ஒன்பது, எனது மாமியின் திருமணத்தின் போது அவரின் வயது ஏழு. அவரின் மாப்பிள்ளை படித்த குடும்பத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர். அதாவது அந்த நாட்களில் ஜி எஸ் மாரை ‘வில்லேஜ் ஹெட் மேன்’ என்று அழைப்பார்கள்.
நாட்டின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்களுக்கு மின்சாரமே சென்றடையாத நாட்டில், இன்டர்நெட், கம்ப்யூட்டர், கைப்பேசிகள், வானொலி, தொலைக்காட்சி என்று எவைதான் சென்றடைந்திருக்க முடியும். வெளியுலகத்தைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கப்படாத ஒரு நாட்டு மக்களுக்கு அவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஏனையோருக்கு இருக்கிறது.
அது மட்டுமல்லாது, எமது இலங்கை போன்ற நாட்டில் இருந்த பெண் கல்வி ஹராம் என்று போதிக்கின்ற முல்லாக்கள் இன்னும் அங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இஜ்மா, கியாஸ் அடிப்படையில் கால மாற்றத்தின் விளைவுகளையும் நவீன தொழிநுட்ப விடயங்களையும் அவர்களின் வாழ்வுடன் இணைப்பதற்கான முயற்சிகளை உலமாக்கள் முன்னெடுக்க வேண்டும். இப்பொழுதுதான் வளர்ந்த நாடொன்றில் அவர்களை வலிமை மிகு நாடுகள் சந்தித்து இருக்கின்றன. உலகம் வேறெங்கோ போய் விட்டது என்பதனை அவர்கள் இப்பொழுது உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அவர்கள் முழுவதுமாக பாகிஸ்தானின் தப்லீக், மற்றும் ஜமாஅதே இஸ்லாமி அமைப்புக்களின் மதரஸாக்களில் இருந்து கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் தான். அமெரிக்காவும் பாகிஸ்தானும் அவர்களை ரஸ்யாவுக்கு எதிராகத் திரட்டி எடுத்து ஏவி விட்டார்கள். அவர்களிடம் தாங்கள் கல்வி கற்ற மத்ரஸாக்களின் கொள்கைகள் கோட்பாடுகள் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அவற்றில் இருந்து விடுபடுதல் சாத்தியமில்லை. இலங்கையில் ஓர் இயக்கம் ஆடிய தாண்டவத்தை கண்முன் கண்டவர்கள் நாம். இந்த இயக்கங்களினால் நலவுகளும் இருக்கின்றன. கெடுதல்களும் இருக்கின்றன. ஆனால் தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியம். அவர்களது செல்வாக்கு மிக்க குருக்களால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் தலிபான்களின் வெற்றி ஒரு சில நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அவற்றுள் இந்தியா, இஸ்ரேல் ஆகியவை முக்கியமானவை. பாகிஸ்தானை மிரட்டிக் கொண்டு, காஷ்மீரை கபளீகரம் செய்த இந்தியாவின் பி ஜெ பி அரசுக்கும், ஆர். எஸ். எஸ். இயக்கத்துக்கும் அது ஒரு பயமுறுத்தல்தான். இனிமேல் முஸ்லீம் மக்களின் மீது அநியாயமான இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்க முடியாமல் நிலைமை மாறலாம். மாட்டு அரசியலும், அடித்தே கொல்லுகின்ற இந்துத்துவா தத்துவத்தின் தீவிரவாதக் கொடுமையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற உணர்வினை அரசுக்கு ஏற்படுத்தலாம். இல்லையென்றால், தீவிரவாதத்தை தாங்களே வரவேற்கின்ற நிலைமைக்கு அவர்கள் தங்கள் நாட்டினை வழிகாட்டுவதாகவே முடியும்.
அடுத்தது இஸ்ரேல், அவர்களைப் பொறுத்தவரை, ஈரான் மட்டுமே அவர்களின் மிகப்பெரிய எதிரி, மட்டுமல்லாது வெளிப்படையான எதிரியும் கூட. அமெரிக்காவினை ஈரானுக்குள் நுழைத்து அந்த நாட்டை சிதைப்பதற்கு பல்லாண்டு காலமாகத் திட்டமிட்டு காய் நகர்த்துகின்ற நாடு இஸ்ரேல். இனிமேல் எந்தக் காய் நகர்த்தல்களும் எடுபடப் போவதில்லை. இன்னுமொரு படையெடுப்பு நடத்துவதானால் அமெரிக்க மக்களை தயார்படுத்துவதற்கு இன்னுமொரு தலைமுறை பிறந்து வர வேண்டும். பொய்களைக் கட்டமைத்து ஈரானுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை ஒன்று திரட்ட முடியாது. ஈராக்கிற்கு எதிராகக் கட்டமைத்த பொய்களின் விகாரம் இன்னும் பல்லிளித்து நிற்கிறது. லிபியாவில் நினைத்தவை நடக்கவில்லை. ஈரானுக்குள்ளும் காலை நுழைத்து மீண்டு வர முடியாத சங்கடத்தில் மாட்டிக் கொள்ள அமெரிக்காவால் இந்த ஜென்மத்தில் முடியாது. இன்னுமொரு தோல்வி அமெரிக்காவை புதை குழிக்குள் அமிழ்த்தி விடும். மண்ணின் மைந்தர்களோடு மோதுவதென்பது மிகவும் சிரமமானது என்பதற்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் சாட்சி. பாலஸ்தீனத்தை வெல்வதற்கு யூதர்கள் மூஸா நபி அலைஹிஸ்ஸலாத்தின் காலத்தில் இருந்தே போரிட்டு வருகின்றார்கள் என்பதற்கு பைபிளின் பழைய ஏற்பாடு சாட்சியாக இருக்கிறது. உலக அரசியல் என்பது ரசூல் ஸல் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாத்துக்குப் பின்னர் உருவானதல்ல. அது பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் தனது ஆணவத்தால் கட்டமைத்தது. அதில் மதம் தனது பங்கினை காலத்துக்குக் காலம் வகித்து நிற்கும்.
இப்படியான பூகோள அரசியல் மாற்றம் ஒன்றினை உலகம் சந்திக்கின்ற ஒரு சந்தியில் நாம் நிற்கின்றோம். அதற்கான சாட்சிகளாக இருப்பதற்கு எமக்கு முடிந்திருக்கிறது. தலிபான்களின் எழுச்சி எப்படியான பூகோள மாற்றங்களைக் கொண்டு வரப்போகின்றது என்பது காலத்தின் கைகளில் இருக்கின்றது. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். பாரிய மாற்றம் ஒன்று காத்திருக்கிறது.
தலிபான்களின் ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்படுமா, பெண்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுமா என்பதெல்லாம் யாராலும் கணிப்பிட முடியாதவை. உலக வல்லரசுகளின் செல்லப்பிள்ளை சவூதியில் இல்லாத கட்டுப்பாடுகள் அங்கே வர சாத்தியமில்லை.
இஸ்லாமிய ஷரிஆ எனப்படும் சட்டங்களில் பிழை சொல்வதற்கு எதுவும் கிடையாது. அவற்றுள் தண்டனைச் சட்டம் மட்டுமே கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. ஒருவர் சொல்கின்றார், கைப்பிடியளவு தாடி வளர்க்கவில்லையானால் கையை வெட்டி விடுகின்றார்களாம். இது இந்தியாவின் சங்கிகளின் கண்டுபிடிப்பு. அதே இந்திய சங்கிகள்தான், தங்கள் நாட்டில் நடக்கின்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு, நிர்பயா வழக்கானால் என்ன, பொள்ளாச்சி சம்பவமானால் என்ன, சிவசங்கர் பாபா பிரச்சினை யானால் என்ன, ஒவ்வொரு சம்பவங்களின் போதும் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் தான் சரியானவை என்று விவாதிப்பதை நாம் பலமுறை கண்டு இருக்கிறோம். இந்தத் தண்டனைகளை எதிர்க்கின்றவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் இடத்திலோ, அவர்களின் உறவுகளின் இடத்திலோ இருந்து இந்தக் குற்றவாளிகளை உற்று நோக்கட்டும். பாலியல் குற்றவாளிகள் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுதான் எனது நிலைப்பாடு. அதைவிட இந்தப் பாலியல் குற்றவாளிகளை அந்தக் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுகின்ற ஏறக்குறைய நிர்வாணமாக அலைகின்ற பெண்களும் ஏதாவதொரு தண்டனைக்குத் தகுதியானவர்களே. ஆடைக்குறைப்புத்தான் நாகரீகம் என்று கருதுகின்ற அரைகுறை அறிஞர் பெருமக்களுக்கு வக்காலாத்து வாங்குகின்ற பெண்ணிய வாதிகள் முதலில் பாதுகாக்க வேண்டியது பாதிக்கப்படுகின்ற அப்பாவிப் பெண்களைத்தானே தவிர நவ நாகரீக நாரீமணிகளை அல்ல.
இறுதியாக, ஆப்கானிஸ்தான் ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. இதில் தங்கள் தங்கள் இயக்கம் சார்ந்த, மற்றும் கொள்கை சார்ந்த கருத்துக்களுடன் மோதுவதனை கைவிட்டு, பூகோள அரசியல் மாற்றத்தை அவதானித்து, உலக சமாதானத்துக்காகவும் மனித குல மேன்மைக்காகவும் பிரார்த்திப்போமாக. ஆமீன்.
டாக்டர் . நஜிமுதீன்