நடிகர்கள் மம்மூட்டி, மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும். தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த விசாவை அந்நாடு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவது வழக்கம்.
பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட் களுக்கு முன் இந்த விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்துள்ளது. மலையாள நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.