இந்தியா, இலங்கை உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள் துபாய்க்கு டூரிஸ்ட் அல்லது விசிட் விசாவில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் தற்போது பயணிக்கலாம் என்று துபாயை சேர்ந்த பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளைதுபாய் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளுக்கு பயணம் செல்லாமல் இருந்திருந்தால் சுற்றுலா விசாவுடன் துபாய்க்குள் நுழையலாம் என ஃப்ளைதுபாய் கூறியுள்ளது. மேலும் PCR சோதனை தேவைகள் புறப்படும் நாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
“நீங்கள் ஒரு UAE குடியிருப்பாளர், GCC குடிமகன் அல்லது துபாய்க்கு விசிட் விசாவில் வருகை தருபவராக இருந்தால், உங்கள் பயணம் எங்கிருந்து தொடங்கினாலும், நீங்கள் புறப்படும் நாட்டில் எடுக்கப்பட்ட சோதனையிலிருந்து துபாய்க்கு உங்கள் உள்வரும் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட எதிர்மறையான கோவிட் -19 PCR சோதனை முடிவை அளிக்க வேண்டும் என இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று எமிரேட்ஸ் விமான நிறுவனமும் ஒரு ஒரு பயணி தனது குழந்தையின் பயணம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு வெளியே தங்கியிருந்தவர்கள், விசிட் விசாவில் துபாய்க்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளது.
இருப்பினும் இந்த நாடுகளிலிருந்து செல்லுபடியாகும் துபாய் விசா வைத்திருக்கும் பயணிகள் துபாய் திரும்புவதற்கு குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களின் பொது இயக்குநகரத்தின் (GDRFA ) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் மற்றும் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆங்கிலம் அல்லது அரபி மொழியில் QR குறியீட்டுடன் எதிர்மறை கோவிட் -19 PCR சோதனையின் நகலையும் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதனுடன் விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு விரைவான ரேபிட் PCR சோதனை விமான நிலையத்தில் எடுக்க வேண்டும் என்பதும், பின்னர் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகும் மீண்டும் ஒரு PCR சோதனையை எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.