பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்!
சண்முகா புதிய தலைமுறைகளுக்கு சொல்லும் செய்தி என்ன?
இலங்கை ஒரு பல்லின பல்சமய பல்கலாசார பண்புகளைக் கொண்ட தேசம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இனக்கப்பாடு சமாதான சகவாழ்வு இந்த தேசத்தின் ஒருமைப்பாடு, சுயாதிபத்தியம், பாதுபாகாப்பு, அரசியல் ஸ்திரத் தன்மை பொருளாதார அபிபிவிருத்தி என்பவற்றின் ஆரம்ப அடித்தளங்கள் அரிச்சுவடி பாடங்கள் என்பதனை நாம் எல்லோரும் அறிவோம்!
சுதந்திரத்திற்கு பின் மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெருந்தேசியவாத நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட தென்னிலங்கை அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகங்களின் தனித்துவங்களை, அடிப்படை உரிமைகளை மதிப்பதற்கு தயங்கியதன் விளைவாக மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுத்திருக்கிறது, பணத்தால் மதிப்பிட முடியாத அரசியல் சமூக பொருளாதார, உயிர், உடமை இழப்புகளுக்கு புறம்பாக சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரயம் செய்து விட்டு இன்று ஒவ்வொரு டாலருக்காகவும் எரிவாய்வு எண்ணெய் பசளை,பால்மா அரிசி என்பவற்றிற்காக பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கிறது.
தென்னிலங்கை பெருந்தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத குறுந்தேசியவாச நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்திய வடகிழக்கு தமிழ் ஆயுதக் குழுக்களும் அரசியல் தலைமைகளும் இரண்டாவது சிறுபான்மை முஸ்லிம்கள் மீது தமது துப்பாக்கி முனைகளை திருப்பியதன் விளைவாகவே அவர்களது நியாயமான உரிமைப் போராட்டத்தை பறிகொடுத்து சர்வதேச பிராந்திய சக்திகளிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் உள்நாட்டில் அரிசியல் ரீதியாக அணுகப்பட்டு அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கம் என்பவற்றினூடாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இனப்பிரச்சினையை சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்காக விலைபேசி "உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் தேசியம்" என்ற உச்சக்கட்ட மடைமையில் தத்ததமது சாமர்த்தியங்களை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிங்கள தமிழ்த் தலைமைகள்.
இன்று, "பேய்கள் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்" என்பது போல் தென்னிலங்கையிலும் வடகிழக்கிலும் இனமத காழ்ப்புணர்வு பரப்புரைகள் மிகவும் கச்சிதமாக முடுக்கிவிடப்பட்டு போருக்கு பின்னரான இலங்கையில் புதிய எதிரிகளை உருவாக்கும் அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட வேலைத்திட்டங்கள் முடுக்கிவிடப் பட்டுள்ளமை பகிரங்க இரகசியமாகும்.
வரலாறு மீண்டும் எதிர்திசையில் வேகமாக சுழல ஆரம்பித்திருக்கிறது தத்தமது குறுகிய பெருந்தேசிய குறுந்தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல் களுக்காக பிராந்திய சர்வதேச சக்திகளிடம் மண்டியிட்ட சிங்கள தமிழ் தலைமைகள் போராளிக் குழுக்கள் இன்று அந்த சக்திகளின் புவிஅரசியல் இராணுவு பொருளாதார நலன்களுக்கான பணயக்கைதிகளாக மாறிப் போய்விட்ட திரிசங்கு நிலை ஏற்பட்டுள்ளது, அவற்றின் பின்புலங்களில் தமது இனமத வெறி பெருந்தேசிய குறுந்தேசிய நிகழ்சி நிரல்களை தீவிரப் படுத்தியுள்ளமையும் பகிரங்க இரகசியமாகும்!
இத்தகைய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இந்த தேசத்தையும் அதில் வாழுகின்ற சமூகங்களையும் மீட்டெடுக்க குரல் கொடுக்க வேண்டிய கல்வி உயர்கல்விச் சமூகம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நாட்டின் வெவ்வேறு பாகங்களில் பாடசாலை சமூகங்களும் கூலிப்படைகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் காவு கொள்ளப்படுகின்ற தூரதிஷ்டமான நிலை ஏற்பட்டு வருகிறது.
அது தென்னிலங்கையாக இருந்தாலும் சரி வடகிழக்காக இருந்தாலும் சரி இரண்டாம் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத பாய்ச்சல் நிச்சயமாக இந்த நாட்டின் தேசிய இனப்பிர்சினைக்கு ஒருபொழுதும் தீர்வைக் கொண்டுவரப் போவதில்லை, மாறாக முடிவில்லாத முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்து அழிவின் விளிம்பிற்கே இந்த நாட்டை இட்டுச் செல்லும் என்பதுவே உண்மை, அதற்காக களமமைத்துக் கொடுக்க இரண்டாவது மூன்றாவது சக்திகள் வழிமேல் விழிவைத்து காத்திருப்பதனை அண்மைக்கால புவியரசியல் வரலாறு உணர்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நீதி நியாயம் சத்தியம் ஒருபோதும் ஒழிக்கப்பட முடியாதவை, பொய், அநீதி அக்கிரமங்களின் ஆயுள் நிச்சயமாக கம்மியானது சத்தியம் மேலோங்கி அசத்தியம் அழிந்தே போகும்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
03.02.2022
