Ads Area

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து ஜனாதிபதியிடம் நேரில் முறைப்பாடு செய்ய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் பிரதிநிதிகள் நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்று உள்ள ஊழல் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு விரைவில் நேரடி முறைப்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் எம். ஐ. எம். றிஸ்விகான் தலைமையிலான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் தெரிவித்தனர்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் சார்பான ஏனைய பிரதிநிதிகள் சகிதம் மருதமுனையில்  ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு,

சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் அதிபரால் ஊழல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாடசாலையின் அபிவிருத்தி குழுவால் செய்யப்பட வேண்டிய வேலையை இப்பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் அதிபருக்கு கொந்துராத்து கொடுத்து உள்ளார். அத்துடன் நில்லாமல் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவே வேலையை செய்ததாக பொய்யான மோசடியான அறிக்கைகளை தயார் செய்தும் உள்ளார்.

இவை தொடர்பாக நாம் வலய கல்வி பணிப்பாளருக்கு நாம் பல முறைப்பாடுகளை செய்தும் அவர் எந்த நீதியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் அதிபரை காப்பாற்ற முயற்சிப்பதுடன் உடந்தையாகவும் நடக்கின்றார். அதிபர், வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் தொடர்பாக நாம் மாகாண கல்வி பணிப்பாளருக்கு முறையிட்டு  நீதிக்காக காத்திருந்தோம். அதிபருக்கு இட மாற்ற உத்தரவு திங்கட்கிழமை வந்ததாக அறிந்தோம். ஆனால் மறுநாள் அதே இட மாற்ற உத்தரவு மாகாண கல்வி பணிப்பாளரால் ரத்து செய்யப்பட்டது என்று அறிகின்றோம். குற்ற செயலுக்கு உடந்தையாக செயற்படுவதும், குற்றம் புரிந்தோரை காப்பாற்ற முயல்வதும், குற்றம் புரிந்தோர் மீது நடவடிக்கை எடுக்க தவறுவதும் சட்டத்தின் பார்வையில் குற்றங்களே ஆகும். காலம் கடந்த நீதியும் அநீதியே ஆகும். இருப்பினும் ஏற்கனவே நாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணை குழு, ஆளுனர் ஆகியோருக்கும் எழுத்துமூல முறைப்பாடுகளை மேற்கொண்டு உள்ளோம்.

அம்பாறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலான கவனத்துக்கும் கொண்டு வந்தும் இருக்கின்றோம். அதே போல வெகுவிரைவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, கல்வி தினேஸ் குணவர்த்தன, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து முறையிடுகின்ற முன்னெடுப்புகளை ஆரம்பித்து உள்ளோம். எம்மை அடக்கி மௌனிக்க செய்வதற்கு ஊழல் சூத்திரதாரிகள் முயற்சிக்கின்றனர். எமது பாடசாலையில் பயில்கின்ற எமது பிள்ளைகளை பல வகைகளில் பழி வாங்குகின்றனர். எம் மீது அடாவடி அரசியல்வாதிகளையும், அடியாட்களையும் தூண்டி விட்ட வண்ணம் உள்ளனர்.

ஆயினும் நாம் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச போவதில்லை. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம். அதிபர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். வலய கல்வி பணிப்பாளர் மீதும் உரிய சட்ட, நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்று இன்னமும் விசுவாசிக்கின்றோம். பாடசாலையில் இரண்டு தடவைகள் செயலாளராக தெரிவான என்னிடம் இதுவரை செயலாளருக்கான எவ்வித பொறுப்புக்களும் ஒப்படைக்கப்படவில்லை. போலியான ஒப்பங்கள், போலியான தீர்மானங்கள், போலியான தகவல்களை வைத்து பாடசாலை நிர்வாகம் இடம்பெற்று கொண்டிருக்கிறது. இவ்விடயங்கள் சகலவற்றுக்கும் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் உடந்தையாக இருக்கிறார். இது தொடர்பில் பெற்றோர்களின் ஒப்பங்கள் பெறப்பட்ட கோரிக்கைகள், முறைகேடு நடைபெற்றதாக சந்தேகிக்கும் ஆவணங்களை, அதிபரை இடமாற்றம் செய்ய கோரும் கோரிக்கைகளை மாகாண கல்விப்பணிப்பாளர், ஆளுநர் போன்றோருக்கு அனுப்பியுள்ளோம்.

சுமார் 40 வருட வரலாற்றைக்கொண்டு காணப்படும் இந்த பாடசாலையில் கல்வி மற்றும் பௌதீக அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தி நாங்கள் பாடசாலையின் உயர்வுக்காக உழைத்துள்ளோம். இந்த பாடசாலையில் நிறைய மறைமுக அஜந்தாக்கள் நடக்கிறது. அரசியல்வாதிகளின் அரசியல் கூட்டத்திற்கு அதிபர் அவர்களின் சார்பில் அழைப்பு விடுக்கிறார். இது எவ்வகையான நிர்வாகம் என்று தெரிகின்றதில்லை.

எங்களை பழிவாங்குவதாக எண்ணி எங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் விளையாடுகிறார்கள். இது தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் பல முறைப்பாடுகளை செய்துள்ளோம். அவை வேலைக்கு ஆகுவது போன்று தெரியாத காரணத்தினால் ஊடகங்களின் உதவியை நாடியுள்ளோம். இந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர், கல்வியமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது இந்த பிரச்சினைகள் தொடர்ந்தால் எங்களின் பிள்ளைகளின் விடுகை பத்திரங்களை பெற்றுக்கொன்று தொடர்ந்தும் போராடுவோம் என்றனர். 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe