ஒரு பாரம்பரிய ஊடகமே இப்படி பச்சையாக, கற்பனைக் கதைகளை எழுதும் போது, இந்நாட்டில் இனவாதம் அழிந்து மனிதநேயம் தலைப்பது என்பது சாத்தியமா?
நேற்று, திருகோணமலை ஷண்முகா இந்து மகளீர் கல்லூரியில் நடந்தது என்னவென்பது முழு நாட்டு மக்களுக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்ட நிலையிலும் இப்படியொரு பச்சைப் பொய்யை துணிந்து எழுதுவதற்கு வீரகேசரிக்கு மாத்திரம் தான் அசால்ட்டு துணிச்சல் என நினைக்கிறேன்.
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அபாயா - முஸ்லிம் பெண்கள் உடலை முழுவதும் மறைத்து அணியும் ஆடையை அணிந்து கொண்டு சென்ற பஹ்மிதா என்ற ஆசிரியைக்கும் மேலும் சில ஆசிரியைகளுக்கும் குறித்த முஸ்லிம் கலாசார ஆடையை - அதாவது உடலை முழுவதும் மறைக்கும் ஆடையை அணிந்து கொண்டு வரக்கூடாது என பாடசாலை நிர்வாகம் பிரச்சினைப்படுத்திய நிலையில்,
குறித்த ஆசிரியை திருகோணமலை ஸாஹிராவிற்கு தற்காலிக மாற்றம் வழங்கப்பட்டு 3 மாதம் எனக்கூறி 10 மாதங்கள் அங்கு பணி செய்து பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்ப்பின் பிரகாரம் மீண்டும் குறித்த கலாசார ஆடையுடன் அதே பாடசாலையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவும் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் கொழும்பு மேல் நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்து அதில் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதை நிரூபித்த பின் மீண்டும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாடசாலைக்கு தனது ஆடை உரிமையை பேணி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வந்தவர் பற்றி இத்தனை பின்னணிகளையும் மறைத்து இப்படியொரு செய்தியை வீரகேசரி பிரசுரித்துள்ளமை தெரியாமல் நடந்த ஒன்றா?
இவர்கள் என்ன கடந்த 3 மாதமாகவா பத்திரிக்கை நடத்துகிறார்கள். 90 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு பத்திரிக்கையல்லவா இது?
உங்கள் செய்தியில் நீதி, நியாயம் தான் இல்லை. ஊடக தர்மம் கூடவா செத்து விட்டது.
வீரகேசரி மற்றும் வீரகேசரி நிறுவனத்தின் விடிவெள்ளி ஆகிய பத்திரிக்கைகளை அதிகமாக வாங்கிப்படிப்பதில் முஸ்லிம்களுக்கு பாரிய பங்குண்டு என்பதை தெரிந்து கொண்டும் இப்படியொரு பச்சைப் பொய்யை கதையாக்குவதினால் இன நல்லுறவு ஏற்படும் என வீரகேசரி நிறுவனம் நினைக்கிறதா? அல்லது இனக்குரோதத்தை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்ட போது எமக்காக எம்முடன் கைகோர்த்து நின்றது தமிழ் சமூகமில்லையா? எமக்காக போராடியது தமிழ் உறவுகள் தானே?
அதே நேரத்தில் உங்கள் உரிமைக்கான P 2 P பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையும் நடையாய் நடந்து கைகோர்த்து இன நல்லுறவுடன் மாமன் மச்சான்களாய் இணைந்து கொண்டவர்கள் இந்த முஸ்லிம் சமூகமில்லையா?
இந்த உறவுகளையெல்லாம் சிதைக்க வேண்டும் என்பதுதான் ஷண்முகா சம்பவத்தின் பின்னணியா? வீரகேசரி செய்தியின் தேவையும் அதுதானா?
குறித்த ஆசிரியையின் வாக்குமூலம் ஆடியோவாக பரவுகிறதே அதைக் கொஞ்சம் கேட்டிருக்கக் கூடாதா?
ஊடக தர்மம் கருதி குறித்த ஆசிரியையிடம் நடந்ததை விசாரித்து செய்தியை எழுதியிருக்கலாமே?
ஆசிரியை பேஸ்புக் லைவ் போட்டார்கள் என்று சகட்டு மேணிக்கு எழுதியுள்ளீர்களே அந்த லைவ் லிங்க் எதுவென காட்ட முடியுமா? லைவ்வாக அவர்கள் ஒளிபரப்பியிருந்தால் நீங்கள் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய தேவையே இருக்காதே? அவரின் லைவ்விலேயே அங்கு நடந்தது தெளிவாக அனைவரும் வெளியாகியிருக்குமே?
இப்படியான செய்திகளை வெளியிடுவதின் மூலம் எரியும் நெறுப்பில் எண்ணையை வார்க்காதீர்கள்.
பாடசாலை கலாசாரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் ஆடையை அணிந்து வந்தார் அதனால் தான் பிரச்சினை என எழுதியுள்ளீர்களே? பாடசாலை ஆசிரியர்களுக்கான தனியான கலாசார ஆடை முறையொன்று இலங்கை கல்வித் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? அது என்ன ஆடையென்று காட்ட முடியுமா?
அரச பாடசாலைகள் அனைத்தும் அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஆசிரியையின் ஆடைக்கு எவ்வித தடையும் விதிக்கக் கூடாது அது அவரின் அடிப்படை உரிமை எனக் கூறியதை குறித்த பாடசாலை நிர்வாகம் மதிக்கவில்லையே? அதைப்பற்றி ஏன் செய்தி போடவில்லை?
மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை பாடசாலை நிர்வாகம் பச்சையாக அவமதித்துள்ளதே அதைப் பற்றி ஏன் உங்கள் பத்திரிக்கையில் எழுதவில்லை?
நாட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படை ஷண்முகாவுக்கு பொருந்தாதா ? அல்லது வீரகேசரிக்கு அது தெரியாதா?
ஊடகங்கள் சமூகங்களுக்கு மத்தியில் இன நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டுமே தவிர இது போன்று பொய்யையும், கற்பனையையும் கதையாக வடித்து காசு சம்பாதிப்பதை நிறுத்த வேண்டும்.
உங்கள் வருமானத்திற்காக இரண்டு சமூகங்களை வம்பிழுக்க வைக்கும் நரித்தனத்தை இனியும் செய்யாதீர்கள். ஊடக தர்மம் பேணுங்கள்.
அன்பு தமிழ் சகோதரர்களும் முஸ்லிம் சகோதரர்களும் இதுபோன்ற நாரதர் வேலை செய்வோர் விஷயத்தில் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும்.
நாட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தை மதிப்போம். அவரவர் கலாசாரத்தை பாதுகாப்போம். இனவாதம் கக்கும் ஊடகங்களை புறக்கணிப்போம்.
