பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதுடன், சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன், தற்போது மின்சாரம் சுழற்சி முறையில் தடைப்படுவதனாலும் எரிபொருள் நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளதை இன்று அவதானிக்க முடிகின்றது.
மேலும், பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கையெடுத்துள்ளனர்.
எரிபொருளின்மையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கையிருப்பு சடுதியாக தீர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இதே வேளை, நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.