எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சகிதம் இச்சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த விற்பனை நிலையங்களில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு, ஹாட்வெயார் ஒன்றில் விலையினை அழித்து விற்பனை செய்தமை தொடர்பில் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விற்பனை நிலையங்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், சில்லறை வியாபார நிலையமொன்றில் பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட பால்மா பக்கற்றுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியைக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதையும், பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களைப் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.