Ads Area

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓட்டுநரை காப்பாற்ற ரூ.34 கோடி ‘குருதிப் பணம்’ திரட்டிய கேரள மக்கள்.

 தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன.


முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவின் உண்மையான கதைக்கு இது மற்றொரு உதாரணம்,” என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.


கடந்த சனிக்கிழமையன்று மற்றொரு செய்தி வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.


அது, அப்துல் ரஹீம் என்ற தனி மனிதரின் உயிரைக் காப்பாற்ற 40 நாட்களில் 34 கோடி ரூபாய் வசூலிக்க, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கேரள மக்களின் ஒன்றிணைந்து பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கியதைப் பற்றியது.


ஒரு உயிரைக் காப்பாற்றத் திரட்டப்பட்ட ரூ.34 கோடி.


அப்துல் ரஹீமை மரண தண்டனையில் இருந்து மீட்க முன்னெடுக்கப்பட்ட இந்தப் பரப்புரையை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருக்கிறார்.


இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கேரள மக்கள் மனிதநேயத்தின் மூலம் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் வெறுப்பைப் பரப்புபவர்கள் பொய்யான கதைகளைப் பரப்புகிறார்கள். கேரள மக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர்,” என்று அப்பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.


“கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீ சௌதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற 34 கோடி ரூபாயைத் திரட்ட கேரள மனங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன."


“ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதிலும், ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும், கேரளா அன்பிற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. வகுப்புவாதத்தால் அழிக்க முடியாத சகோதரத்துவத்தின் கோட்டையாக கேரளா திகழ்கிறது என்பதற்கு இதுவே சான்று. இது தான் உண்மையான கேரளா ஸ்டோரி," என்று பெருமிதத்துடன் பகிர்ந்திருந்தார்.


காங்கிரஸ் கட்சியின் பதிவு.


அதேசமயம், கேரள மாநில காங்கிரஸ், அப்துல் ரஹீமின் கதையை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு, அதை 'தி ரியல் கேரளா ஸ்டோரி’ என்று குறிப்பிட்டிருந்தது. அப்பதிவில், "கேரளாவின் உண்மையான கதை இது! தொடர்ச்சியான வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்கொண்டாலும், கேரள மக்களின் அசைக்க முடியாத மனிதாபிமானத்தை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும், “கடந்த 18 ஆண்டுகளாக ரியாத்தில் சிறை வைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கும் அப்துல் ரஹீமின் விடுதலைக்காக கிட்டத்தட்ட 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. மகனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற தாய்க்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உதவினர். இந்த மனிதாபிமான முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி,’’ என அப்பதிவு தெரிவித்திருந்தது.


யார் இந்த அப்துல் ரஹீம்?


கொல்கத்தாவின் ஆங்கில நாளிதழான 'தி டெலிகிராப்' வெளியிட்ட செய்தியின்படி, கோழிக்கோட்டைச் சேர்ந்த 41 வயதான அப்துல் ரஹீம் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர்.


'இந்தியா டுடே' இணையதளத்தின்படி, அவர் 2006-இல் ஹவுஸ் டிரைவிங் விசா மூலம் ரியாத் சென்றடைந்தார். வாகனம் ஓட்டுவதைத் தவிர, மாற்றுத் திறனாளி குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில் அந்தக் குழந்தை ஒரு விபத்தில் இறந்தது.


அந்தச் சிறுவனைப் பார்த்துக் கொள்வதும், காரில் ஏற்றிச் செல்வதும் அப்துல் ரஹீமின் வேலை. ஆனால் சிறுவனின் கழுத்தில் சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவியை ரஹீம் தவறுதலாக கீழே போட்டதன் விளைவாக சிறுவன் உயிர் பறிப்போனது.


அதற்காக, 2012-இல் சௌதி நீதிமன்றம் ரஹீமுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.


ரஹீமுக்காக சட்ட உதவி பெற கேரள மக்கள் முயற்சி செய்யத் துவங்கினர். மேலும், அவரது குடும்பத்தினரை அவருக்காக 'குருதிப் பணம்' (blood money) திரட்ட சம்மதிக்க வைத்தனர். முன்னதாக அப்துல் ரஹீமின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றம் வழங்கப்பட்ட மரண தண்டனையை 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உறுதி செய்தது.


'தி டெலிகிராப்' செய்தியின்படி, சௌதி அரேபியாவில் வசிக்கும் கேரள தொழிலதிபர் அஷ்ரஃப் வெங்கட், கடந்த வெள்ளிக்கிழமை கொடுத்த பேட்டியில், விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பம் பல ஆண்டுகளாக ரஹீமை மன்னிக்க மறுத்ததை தொடர்ந்து, 2023-இல் 1.5 கோடி ரியால் குருதிப் பணம் கொடுப்பதாக அவர்களிடம் பேசப்பட்டது. அப்துல் ரஹீமின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் சம்மதித்ததாக தெரிவித்தார்.


"குழந்தையை இழந்த குடும்பம் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி குருதிப் பணத்தை ஏற்றுக் கொண்டு ரஹீமுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த எழுத்துப்பூர்வ வாக்குறுதியைக் கருத்தில் கொண்டு, மரண தண்டனை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது." என்று அஷ்ரஃப் வெங்கட் கூறினார்.


'தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தியின்படி, அப்துல் ரஹீமின் விடுதலைக்காக 2021-இல் அமைக்கப்பட்ட `அப்துல் ரஹீம் சட்ட நடவடிக்கைக் குழு’ மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.


அப்துல் ரஹீமை காப்பாற்றும் பிரசாரம் தொடங்கியது எப்படி?


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கீழ் இயங்கும் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் சவூதி பிரிவின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வெங்கட் சமீபத்தில் கோழிக்கோடு வந்திருந்தார்.


கேரளாவில் உள்ள பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் உதவியுடன் ரஹீமுக்கான நன்கொடை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதே அஷ்ரஃப்பின் நோக்கம். “ரஹீமின் உயிரைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவில் இந்து, முஸ்லிம், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர்,” என்கிறார் வெங்கட்.


கடந்த வெள்ளியன்று (ஏப்ரல் 12), “அவரது விடுதலைக்குத் தேவையான ரூ.34 கோடி இலக்கை எட்டியுள்ளோம். தயவுசெய்து மேலும் பணம் அனுப்ப வேண்டாம். தற்போது, ரூ.34.45 கோடி வசூலித்துள்ளோம். அதிகமாக பெறப்படும் தொகை தணிக்கை செய்யப்பட்டு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.


“குழந்தையை இழந்த குடும்பத்தினருடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை முன்னெடுத்து அப்துல் ரஹீமின் விடுதலையை உறுதி செய்ய, எங்கள் அறக்கட்டளை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளும்,” என்று அவர் கூறினார்.


மேலும், “இந்தத் தொகை பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு அப்துல் ரஹீமின் மன்னிப்பை கோரும் ‘குருதிப் பணமாக’ வழங்கப்படும்,” என்றும் வெங்கட் குறிப்பிட்டார்.


அப்துல் ரஹீமின் தாய் சொல்வது என்ன?


அப்துல் ரஹீமைக் காப்பாற்ற சவூதி அரேபியாவில் உள்ள கேரள மக்களின் அமைப்பு முக்கிய பங்காற்றிய நிலையில், சுரேஷ் என்ற நபரும் பெரிதும் உதவினார்.


சட்ட உதவிக் குழுவின் தலைவரான சுரேஷ், கடந்த மார்ச் 3-ஆம் தேதி கோழிக்கோட்டில் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.


ரூ.34 கோடியை வசூலிக்கத் தொடங்கப்பட்ட இந்தப் பரப்புரை, தொழிலதிபர்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவர்கள் இணைந்தபோது வேகம் பெற்றது.


“எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை,” என அப்துல் ரஹீமின் தாய் ஃபாத்துமா கூறியதாக 'தி டெலிகிராப்' செய்தி வெளியிட்டுள்ளது.


செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்குள்ள மக்களின் உதவியால் இவ்வளவு பெரிய தொகையை இவ்வளவு விரைவாக வசூலிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்,” என்றார்.


இதுகுறித்து பேசிய அஷ்ரஃப் வெங்கட், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணம் அனுப்பும் பணி துவங்கியுள்ளது, என்றார். அந்தத் தொகை வஃக்ப் வாரியம் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும், என்றார். பணம் அனுப்பப்பட்ட பின், அப்துல் ரஹீமின் விடுதலையை எதிர்பார்க்கலாம் என்றும், ஆனால் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என்றும் வெங்கட் கூறினார்.


Thanks - BBC Tamil




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe