Ads Area

சட்டத்துறையில் வரலாற்றுத் தடயத்துடன் விடைபெற்றார் நீதியரசர் அமீர் இஸ்மாயில்! சம்மாந்துறை மீடியா போரத்தின் அனுதாபச் செய்தி!!

 

சம்மாந்துறையின் முதுசம்மிக்க இலட்சினையான உயர் நீதிமன்ற நீதியரசர் அமீர் இஸ்மாயில் தனது 85 வது வயதில் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மறைந்த செய்தி (20.04.2024) எமது சமூகத்தின் புத்திஜீவிகள் வரிசையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கிழக்கிலங்கை வரலாற்றில் முதலாவது நீதியரசரான இவர் சம்மாந்துறை மண் பெற்றெடுத்து இன்று இழந்துள்ள அறிவுச் சுரங்கம் ஆவார். 

அன்னாரின் மரணச் செய்தி வரலாற்றுத் தடயத்தை இட்டுச் சென்றுள்ளது என்ற ஆழ்ந்த இரங்கலுடன், தனது பிரார்த்தனைகளையும், அனுதாபங்களையும் சம்மாந்துறை மீடியா போரம் தெரிவித்துக் கொள்கின்றது. 


1939ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலத்திலும் உயர் கல்வியை கொழும்பு உவெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார். 


பாடசாலைக் கல்வியின் பிற்பாடு சில காலங்கள் கொழும்பிலுள்ள உயர் கல்லூரியொன்றில் ஆசிரியராக கடமையாற்றிய பின்னர் சட்டக்கல்வியை தொடர்ந்ததுடன் 1967 இல் இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டத்தரணி கற்கையை பூர்த்தி செய்துவிட்டு அதே ஆண்டில் உயர்நீதி மன்றத்தின் சட்டத்தரணியாகிறார். 


சம்மாந்துறையில் 1930 களில் பெயர் பூத்த பொறியியலாளராக திகழ்ந்த மர்ஹூம் இஸ்மாயில் என்ஜினியரின் இரண்டாவது மகனான இவராது கல்விப் பரப்பானது தகப்பன் வழிவென்ற சாதனைச் சிகரம் என்றுதான் சொல்ல வேண்டும். 


தியாகம், நேர்மை, கடமையுணர்வு, சமூக அக்கறை போன்ற பலதையும் அகத்தில் கொண்ட இஸ்மாயில் என்ஜினியர் 1930 களில் டீ.எஸ். சேனாநாயக்க ஆட்சிக் காலத்தில் உடைந்திருந்த பராக்கிரம சமுத்திரத்தை மீள திருத்தியமைககும் பாரிய பணியை பொறுப்பேற்று முழு முஸ்லிம் சமூகத்தினருக்கும் சான்று படைத்தார்.


நீர்ப்பாசனப் பொறியியலாளரான இஸ்மாயில் எனும் ஆளுமையான அவர் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுத் தடயத்தை சான்றூன்றினார். (இந்தத் தகவல் பொலன்னறுவ நீர்ப்பாசன அலுவலகத்தின் பதிவுப் புத்தகத்தில் உள்ளது.)


- இவ்வாறு ஆளுமை கொண்ட பொறியியலாளர் இஸ்மாயில் அவர்களின் இளைய மகனாகிய நீதியரசர் அமீர் இஸ்மாயில், 


குறுகிய கால பயிற்சியின் பின்னர் 1971 இல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச ஆலோசகராக இணைந்தார். 12 ஆண்டுகள் அரச வழக்கறிஞராகவும், சிரேஷ்ட அரச வழக்கறிஞராகவும் பணியாற்றி விட்டு பின்னர் 1983 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறையில் உள்வாங்கப்பட்டார்.

 

மேலும், 1983 இல் நெதர்லாந்தின் Utrecht பல்கலைக்கழகத்தில் சர்வதேச விமானச் சட்டம் டிப்ளோமா பெற்றுள்ளதுடன், 1998 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள சட்ட அமைப்புகளின் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட முரண்பாடு தீர்த்தல் சட்டப் படிப்பையும் தொடர்ந்திருந்தார்.


உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பல்வேறு நிலையங்களில் பணியாற்றிய பின்னர், 1990 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.


தொடர்ந்தும் அவர் 1990 இல் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்வு பெற்றார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றியதுடன், சட்டக் கல்விப் பேரவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு உச்ச அடைவுகளைப் பெற்று சேவையாற்றி ஓய்வு பெற்றார்.


நீதியரசராக இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் 2005 - 2010 காலப் பகுதியில் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஐந்து ஆண்டுகளுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


இவ்வாறு தனது இள வயது முதல் கல்விப் பரப்பில் விசாலமாகியிருந்து அறிவின் கூர்மையான நீதியரசர் மர்ஹூம் அமீர் இஸ்மாயில் சம்மாந்துறை மண் பதியினதும், எமது சமூகத்தினதும் வரலாற்றுத் தடயத்தை விட்டுச் செல்லும் அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்புற பிரார்த்திப்பதுடன், வல்லநாயன் அன்னாருக்கு உயர் ஜென்னாஹ்வை பரிசளிப்பானாக என்றும் பிரார்த்திக்கின்றோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe