Ads Area

றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு : விஷேட கலந்துரையாடல்.

 (எஸ்.அஷ்ரப்கான்)


கல்முனைத்தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.சி.அகமட்டின் பேரனும், முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மையோன் முஸ்தபாவின் மகனுமான றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்வது சம்பந்தமாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், மாவட்ட செயற்குழுத்தலைவர் கே.எம்.ஏ.ஜவாத் தலைமையில் (05) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் ஈ.எப்.சியில் இடம்பெற்றது. 


இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட றிஸ்லி முஸ்தபா உரையாற்றுகையில்,


"எனது தந்தை மரணிப்பதற்கு முன் கூறினார், இலங்கையிலிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளில் றிஷாட் பதியுதீன் ஒரு ஆளுமையுள்ள இளம் தலைவர், அவரது கட்சியில் இணைந்து பயணிப்பது சிறந்தது என்றும் என்னிடம் கூறியிருந்தார்.


இக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், கட்சியின் கட்டமைப்பும் எனக்கு மிகவும் பிடித்த சிறந்ததாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. 


இக்கட்சியின் மாவட்ட எழுச்சிக்காக முன் நின்று உழைக்க, மாவட்ட ரீதியாக எமது இளைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தனது குடும்பத்தினர்களின் முழு வருகையுடனான ஒத்துழைப்புடன், கல்முனைத் தொகுதியில் பிரமாண்டமான ஒரு இணைவுக்கான நிகழ்வொன்றை நான் நடாத்த எண்ணியுள்ளேன் என்றார்.


இந்நிகழ்வுக்கு கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் வருகையோடு கட்சியில் இணைந்து கொண்டு பயணிக்க அங்கிகாரம் வேண்டியவனாக, அதற்கான நேரத்தையும், காலத்தையும் விரைவில் தலைமையிடமிருந்து ஒதுக்கித்தாருங்கள் என கட்சியின் மாவட்ட செயற்குழுவிடம் றிஸ்லி முஸ்தபா வேண்டிக் கொண்டார்.


இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe