பாறுக் ஷிஹான்.
தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்குமுகமாக நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவுத்தூபியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என்.ஜயபத்ம உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப்புலிகளினால் 1990ம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இதன் போது முன்னெடுக்கப்பட்டன.
இது தவிர, நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவினால் பொலிஸ் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன், உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1990ம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட புலிகள் சகல சிங்கள, முஸ்லிம் பொலிஸாருடன் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றனர்.
அதன் பின்பு திருக்கோவில் பகுதியிலுள்ள ரூபஸ் குளம் காட்டுப்பகுதியில் சகல பொலிஸாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.