Ads Area

கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டாக்காலிகள் : தீர்வென்ன?

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.


கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  வீதிகளில் சுற்றித்திரியும் இவ்வாறான கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமமும் ஏற்பட்டு வருகின்றது.


மேலும், கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள் உரிய தரப்பினரால்  அத்தியாவசிய சேவைகளான பிரதேச செயலங்கள், வைத்தியசாலைகள், வங்கிகள், பொதுப்போக்குவரத்து பகுதிகளில் இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன. வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டமுள்ள இடங்கள், பிரதான வீதிகளை ஆக்கிரமித்து கட்டாக்காலி மாடுகள், ஆடுகள் சுதந்திரமாக திரிகின்றன. 


எனவே, கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றைக்கைப்பற்றி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தற்போது இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடு, ஆடுகளின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகின்றது. இதனால் இவ்வீதியில் பயணம் செய்யும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றன.


இக்கட்டாக்காலிகள் பிரதான வீதிகள், பொதுச்சந்தைகள், விளையாட்டு மைதானங்கள் பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.


அத்துடன், இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து அசுத்தப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.


இவற்றைக் கருத்திற்கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக்கைப்பற்றி உரிமையாளர்களுக்கு உரிய தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் இதனைக்கட்டுப்படுத்த உரிய தரப்பினர் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe