Ads Area

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை பரிட்சைக்கு முன்னரே பகிர்ந்த 3 பேர் சஸ்பெண்ட்.

அநுராதபுரம் ரத்மலே திஸ்ஸ மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய கண்காணிப்பாளர் உட்பட மூவரை பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் தெரிவித்தார்.


சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


முதற்கட்ட விசாரணையில், உதவி கண்காணிப்பாளர் தேர்வின் முதல் வினாத்தாளின் புகைப்படங்களை, பரீட்சை தொடங்கும் முன், தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் சமூக ஊடகக் குழுவில் பகிர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது.


இதன்படி, குறித்த பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரின் சேவையை விரைவில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மேலும், பகிரப்பட்ட வினாத்தாளைப் பெற்றதாகக் கூறப்படும் அனுராதபுரம் மற்றும் நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த பத்து ஆசிரியர்களும் தமது வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற தரம் 5 பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சுமார் 100 பெற்றோர்கள் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பெற்றோர்கள் போலீசில் அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe