Ads Area

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் - 7 பேர் கைது.

 பாறுக் ஷிஹான்.


விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் வெள்ளிக்கிழமை(27) விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இத்தாக்குதலினால் நிலைகுலைந்த குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பல்வேறு  குற்றத்தடுப்புப்பிரிவில் கடந்த வியாழக்கிழமை (26) முறைப்பாடொன்று வழங்கப்பட்டிருந்தது. வழமை போன்று அம்முறைப்பாட்டை ஆராய  இரு தரப்பினரை வரவழைத்த பொலிஸ் அதிகாரி விசாரணை விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.


குறித்த விசாரணை பொலிஸ் அதிகாரி முன்னிலையில்  இடம்பெற்றுக்கொண்டிருந்த போது முறைப்பாட்டாளர்  பக்கமாக நின்ற பெண் திடீரென தனது செருப்பினைச் கழற்றி மறுமுனையிலிருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.


இதன் போது உடனடியாகச்செயற்பட்ட அப்பொலிஸ் அதிகாரி குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்துள்ளார்.


இந்நிலையில், பொலிஸ் அதிகாரியை திடீரென குழுவாக இணைந்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள்  தாக்கியுள்ளனர்.


இதன் போது, சற்றும் எதிர்பார்க்காத குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் கடமைக்கு இடையூறு செய்தமை, சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை, வன்முறையைத்தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் எஞ்சிய சந்தேக நபர்களைக்கைது செய்ய பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணைகளை கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக மேற்கொண்டுள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe