(பாறுக் ஷிஹான்)
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் பலநாட்களாக மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில், மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவியை அக்கரைப்பற்று பொலிஸார் நாடியுள்ளனர்.
புதன்கிழமை (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை, முள்ளி மலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது, கடும் நீல நிற ரீசேர்ட் அணிந்து காணப்படுவதுடன், 5 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுவதாக நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர்.
மேலும், குறித்த இம்மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தவிர, எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் காணாமற்போனவர்கள் தொடர்பில் எதாவது முறைப்பாடு உள்ளதா? என்பதைக்கண்டறிய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.