சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் மாபெரும் பிரசாரக்கூட்டம் சம்மாந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது.
இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர் கே.ஆர்.எம்.றிசாட் கருத்துத்தெரிவிக்கையில், எதிர்வரும் மே 6ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் சகோதரர் நௌஷாட் களமிறங்குவார் என அறிந்தும் தைரியமாக இத்தேர்தலில் களமிறங்கத்துணிந்தவன் நான்.
இத்தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் நான் களமிறங்க வேண்டுமென்ற மக்களின் கோரிக்கைக்காகவே இத்தேர்தலில் களமிறங்கியவன் என்ற வகையில் உங்களுடைய நம்பிக்கையை நான் காப்பாற்றியே ஆவேன் எனத்தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் கடந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பற்றி மிகவும் நேர்த்தியாகக் கூறியிருந்தார். ஆனால், நாம் தேசிய மக்கள் சக்தி எனும் மாய வலையினுள் இருந்ததனால் அது எமக்குத் தெரியாமல் போயிருந்தது.
ஆனால், இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு எங்களுடைய அரசாங்கம் எனச்சொல்லுவதற்கு வெட்கமான நிலைமை எற்பட்டிருக்கிறது.
சம்மாந்துறை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் ஊர். ஆனால், இவ்வாய்ப்பை கடந்த தேர்தலில் நாமிழந்து நிற்கின்றோம். மீண்டும் அச்சந்தர்ப்பம் வருமா? என்கின்ற கவலை இருக்கின்ற போது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இன்று நடைபெறவிருக்கின்றது. ஏனென்றால், எங்களுடைய ஊருக்கு அதிகாரம் தேவையென்பதனால் தான் நான் கூட இத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக எல்லோரும் எல்லா வட்டாரங்களையும் விட்டு விட்டு அவர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக அவருடைய வட்டாரத்தில் ஒட்டுமொத்தமாக நிற்கின்றார்கள்.
ஆனால், நிச்சயமாக முதலில் தோல்வியடையும் வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை வேட்பாளராகத்தான் இருப்பார் எனத்தெரிவித்தார்.